இங்கிலாந்தின் குடியேற்ற முறையில் மாற்றமா?

இங்கிலாந்தில் ஆஸ்திரேலியாவின் புள்ளிகள் அடிப்படையிலான குடியேற்ற முறையை நடைமுறைக்கு கொண்டு வர அரசு கடுமையாக உழைத்து வருவதாக இங்கிலாந்து உள்துறை செயலாளர் பிரீத்தி பட்டேல் தெரிவித்துள்ளார்.

திறன்வாய்ந்தவர்களுக்கான விசா விண்ணப்பங்களை ஆஸ்திரேலிய குடியேற்றத்துறை அதிகாரிகள் பரிசீலிக்கும் போது, ‘ஆங்கிலப்புலமை, பணி அனுபவம், வயது’ அடிப்படையில் புள்ளிகளை வழங்கி, அதை வைத்து விசா வழங்குகிறார்கள்.

இந்த அடிப்படையிலான விசா வழங்கும் முறையினையே தற்போது இங்கிலாந்தில் கொண்டு வரப்பட வேண்டும் எனச் சொல்கிறார் பட்டேல். இந்த முறை இங்கிலாந்துக்கு பொருந்துமா என்பதை பரிசீலிக்குமாறு கடந்த மாதம் புலம்பெயர்வு ஆலோசனைக் குழுவிடம் அவர் கேட்டிருக்கிறார். இக்குழு இது தொடர்பான அறிக்கையை வரும் ஜனவரி மாதம் வழங்க வேண்டும் எனக் கூறப்பட்டுள்ளது.

ஆஸ்திரேலியாவின் குடியேற்ற கொள்கையை ஆராய்ந்து வரும் பேராசிரியர் அலெக்ஸ் ரெய்லி, புள்ளிகள் அடிப்படையிலான முறை ஆஸ்திரேலியாவில் வெற்றியடைந்தது போல இங்கிலாந்தில் நிகழும் என்பதற்கு எந்தவித உத்தரவாதமும் இல்லை எனக் கூறியிருக்கிறார்.

ஐரோப்பிய யூனியனிலிருந்து இங்கிலாந்து வெளியேறும் சூழலில், இந்த நாட்டின் குடியேற்ற முறையை மாற்ற ஓர் அரிய வாய்ப்பு கிடைத்துள்ளதாகக் கூறுகிறார் இங்கிலாந்தின் உள்துறை செயலாளர் பிரீத்தி பட்டேல்.

திறன்வாய்ந்தவர்களுக்கான விசா வழங்குவதில் கனடா, நியூசிலாந்து போன்ற நாடுகளும் புள்ளிகள் அடிப்படையிலான முறையை பின்பற்றி வருகிறது. “இங்கிலாந்தில் குடியேற்றம் என்பது அரசியல் காரணங்களுக்காக பயன்படுத்தப்படுகிறது. ஆஸ்திரேலியாவின் புள்ளிகள் அடிப்படையிலான முறையை இங்கிலாந்து உண்மையாக பின்பற்றுவதற்கு குறைந்தளவு வாய்ப்பே உள்ளது,” என்கிறார் சிட்னி பல்கலைக்கழகத்தின் பேராசிரியரான மேரி கிராக்.

புள்ளிகள் அடிப்படையிலான முறை எனக்கூறி மக்களின் மனங்களுடன் விளையாடும் வேலைகள் தான் நடப்பதாக கூறியிருக்கிறார் பேராசிரியர் கிராக்.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்