அடுத்த அரசாங்கத்திலும் ரணிலே பிரதமர் – அஜித் பி பெரேரா

சஜித் பிரேமதாஸ தலைமையிலான அரசாங்கத்திலும், ரணில் விக்கிரமசிங்க பிரதமராக நீடிப்பார் என்று அமைச்சரவை அந்தஸ்தற்ற அமைச்சர் அஜித் பி பெரேரா தெரிவித்தார்.

மேலும், காலி முகத்திடலில் எதிர்வரும் 10 ஆம் திகதி இடம்பெறவுள்ள சஜித் பிரேமதாஸவின் கூட்டமே இலங்கை வரலாற்றில் மிகப்பெரிய அரசியல் கூட்டமாக அமையும் என்றும் அவர் குறிப்பிட்டார்.

கொழும்பில் நேற்று (ஞாயிற்றுக்கிழமை) இடம்பெற்ற ஊடகசந்திப்பில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும்போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.

இதன்போது தொடர்ந்து தெரிவித்த அவர், “காலி முகத்திடலில் இடம்பெறவுள்ள எமது கூட்டமே இலங்கை அரசியல் வரலாற்றில் மிகப்பெரிய கூட்டமாக அமையவுள்ளது.

இதில் 5 இலட்சத்திற்கும் அதிகமான மக்கள் கலந்துகொள்வார்கள் என நாம் நம்புகிறோம்.  பெப்ரல் அமைப்பானது இலங்கை வரலாற்றிலேயே முதன் முறையாக அனைத்து வேட்பாளர்களையும் ஒரே மேடையில் கொண்டுவந்து, மிகவும் பயனுள்ள ஒரு நிகழ்வொன்றை நடத்தியிருந்தது.

சஜித் பிரேமதாஸ உள்ளிட்ட பிரதான வேட்பாளர்கள் அனைவரும் அதில் கலந்து கொண்டிருந்தபோதிலும், ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் ஜனாதிபதி வேட்பாளர் கோட்டாபய ராஜபக்ஷ மட்டும் அதில் கலந்து கொள்ளவில்லை.

இதேபோன்றதொரு சந்தர்ப்பத்தை நாம் மீண்டும் ஏற்படுத்த தயாராகவுள்ளோம்.  அதாவது, சஜித் பிரேமதாஸ மற்றும் கோட்டாபய ராஜபக்ஷ ஒரே மேடையில் இணைந்து தங்களது கொள்கைப் பிரகடனங்கள் தொடர்பாக அனைத்து ஊடகங்கள் முன்னிலையிலும் விவாதமொன்றை நடத்த வேண்டும்.

இதற்காக நாம் கோட்டாபய ராஜபக்ஷவுக்கு இவ்வேளையில் அழைப்பு விடுக்கிறோம்.  அவர் இதுபோன்ற மூன்று விவாதங்களில் கலந்து கொள்ள வேண்டும் என்பதுதான் எமது வேண்டுகோளாகும்.

இப்போதே இதற்கான அழைப்பு விடுக்கப்பட்டுள்ளதால், கோட்டா ,திலிருந்து தப்பித்துக் கொள்ள முடியாது.  அத்தோடு, எமது தரப்பில் பிரதமர் யார் என்ற கேள்வியும் தற்போது எழுந்துள்ளது.

ஆனால், எமது தரப்பில் பிரதமர் ஒருவர் இருக்கிறார். அவர்தான் அடுத்த அரசாங்கத்திலும் இருப்பார். எனவே இதற்கு புதிய ஒருவர் தேவையில்லை என்பதுவே எமது கருத்தாகும்” என அவர் தெரிவித்தார்.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்