தேர்தலுக்காக பொது சொத்துக்கள் பயன்படுத்தப்பட்டமை குறித்து 10 முறைப்பாடுகள்!

தேர்தலுக்காக பொது சொத்துக்களை பயன்படுத்தியமை குறித்து இதுவரையில் 10 முறைப்பாடுகள் பதிவு செய்யப்பட்டுள்ளன.

இலங்கை ட்ரான்ஸ் பெரன்சி நிறுவனத்தின் பொது சொத்துக்களை பாதுகாக்கும் தேசிய இணைப்பாளர் லக்விஜய பண்டார இதனைத் தெரிவித்துள்ளார்.

அண்மையில் வெளியிடப்பட்ட வர்த்தமானி அறிவித்தலுக்கமைய எந்தவொரு அரச சொத்தையும் தேர்தல் பிரசார நடவடிக்கைகாக பயன்படுத்த முடியாது எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

அத்துடன், அரச ஊழியர்களும் தேர்தல் செயற்பாடுகளுக்காக அரச சொத்துக்களை பயன்படுத்த முடியாது எனவும் அவர் கூறியுள்ளார்.

தரம் உயர்த்தல், நியமனம் வழங்கள் மற்றும் இடமாற்றம் செய்தல் போன்றவற்றையும் இந்த காலப்பகுதியில் முன்னெடுக்க முடியாது எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

மேலும், இந்த காலப்பகுதிக்குள் அரச நிதியை ஒதுக்கீடு செய்து நிகழ்வுகளை நடத்த முடியாது எனவும் இலங்கை ட்ரான்ஸ் பெரன்சி நிறுவனத்தின் பொது சொத்துக்களை பாதுகாக்கும் தேசிய இணைப்பாளர் லக்விஜய பண்டார கூறியுள்ளார்.

இலங்கை முழுவதும் ட்ரான்ஸ் பெரன்சி நிறுவனம் சார்பில் 180 இற்கும் அதிகமான காண்காணிப்பாளர்கள் கடமையில் ஈடுபடுத்தப்பட்டுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

இதேவேளை, தேர்தல் பிரச்சார நடவடிக்கைகளின் போது பொதுச் சொத்துக்கள் முறையற்ற விதத்தில் பயன்படுத்தப்படுதல் அல்லது துஷ்பிரயோகம் செய்தல் குறித்து முறைப்பாடு செய்யுமாறு அறிவிக்கப்பட்டுள்ளது.

இதற்காக அவசர சேவையின் தொலைபேசி இலக்கங்களை ட்ரான்ஸ்பேரன்ஸி இன்டர்நெஷனல் அமைப்பு அறிமுகம் செய்துள்ளது.

தேர்தல் பிரச்சாரங்களின் போது பொதுச் சொத்துக்கள் துஷ்பிரயோகம் செய்யப்படுதல் தொடர்பான முறைப்பாடுகளை 076-3223662, 0763223448 ஆகிய தொலைபேசி இலக்கங்களின் ஊடாக அறிவிக்க முடியும்.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்