கோட்டாவை ஆதரித்து ‘மொட்டு’ சின்னத்தை ஏற்றது சுதந்திரக் கட்சி – மைத்திரி நடுநிலை

ரீலங்கா பொதுஜன முன்னணியின் ஜனாதிபதி வேட்பாளர் கோட்டாபய ராஜபக்சவை ஆதரிப்பதற்கு தமது கட்சி தீர்மானித்துள்ளது என ஶ்ரீலங்கா சுதந்திரக் கட்சி இன்று புதன்கிழமை உத்தியோகபூர்வமாக அறிவித்தது.

ஜனாதிபதித் தேர்தல் தொடர்பில் கட்சியின் நிலைப்பாட்டை அறிவிக்கும் நோக்கில் ஶ்ரீலங்கா சுதந்திரக் கட்சி, மருதானை டார்லி வீதியில் அமைந்துள்ள கட்சித் தலைமையகத்தில் இன்று முற்பகல் விசேட ஊடகவியலாளர் மாநாட்டை நடத்தியது.

கட்சியின் சிரேஷ்ட உப தலைவர் நிமல் சிறிபால டி செல்வா, பொதுச்செயலாளர் தயாசிறி ஜயசேகர, ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின் பொதுச்செயலாளர் மஹிந்த அமரவீர உட்பட சு,கவின் உயர்மட்டப் பிரமுகர்கள் பங்கேற்று ஊடகங்களிடம் கருத்து வெளியிட்டனர்.

இதன்போது அவர்கள் தெரிவித்த கருத்துக்களின் சாராம்சம் வருமாறு:-

“ஶ்ரீலங்கா பொதுஜன முன்னணியின் ஜனாதிபதி வேட்பாளர் கோட்டாபய ராஜபக்சவை ஆதரிப்பதற்கு எமது கட்சி முடிவெடுத்துள்ள நிலையில் கூட்டணிக்கான புரிந்துணர்வு உடன்படிக்கை வெகுவிரைவில் கைச்சாத்திடப்படும்.

கட்சி, வேட்பாளர் என்ற அடிப்படையில் இரண்டு உடன்படிக்கைகள் கைச்சாத்திடப்படும்.

அடுத்துவரும் நாடாளுமன்றத் தேர்தல் மற்றும் மாகாண சபைத் தேர்தல்களின்போது கூட்டணியாக ‘கதிரை’ சின்னத்திலேயே களமிறங்குவோம். இதற்கான இணக்கப்பாடு எட்டப்பட்டுள்ளது.

மஹிந்த ராஜபக்சவும், மைத்திரிபால சிறிசேனவும் இணைத்தலைவர்களாகச் செயற்படுவார்கள்.

கோட்டாபய ராஜபக்சவை ஆதரிக்கும் தீர்மானத்தால் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சிக்குள் எவ்வித பிளவும் ஏற்படவில்லை.

அநுராதபுரத்தில் இன்று நடைபெறும் கோட்டாபய ராஜபக்சவின் தேர்தல் பரப்புரைக் கூட்டத்தில் எமது கட்சியின் சார்பில் கலந்துகொள்வதாலேயே துமிந்த திஸாநாயக்க, வீரகுமார திஸாநாயக்க ஆகியோர் இந்த ஊடகவியலாளர் மாநாட்டில் பங்கேற்கவில்லை.

பாதுகாப்பு , சட்டம் – ஒழுங்கு உட்பட முக்கிய அமைச்சுகள் ஜனாதிபதி வசமே உள்ளன. அமைச்சரவையின் தலைவராகவும் அவரே இருக்கின்றார். எனவே, ஜனாதிபதித் தேர்தலில் அவர் நடுநிலை வகிப்பதற்காகவே பதில் தவிசாளராக பேராசிரியர் ரோஹண லக்‌ஷ்மன் பியதாச நியமிக்கப்பட்டுள்ளார். ஜனாதிபதித் தேர்தல் முடியும்வரை அவரே பதவியில் நீடிப்பார்.

தீர்மானங்களைக் கட்சியின் அரசியல் குழு எடுக்கும். பதில் தவிசாளர் அதனைச் செயற்படுத்துவார். ஜனாதிபதியின் ஆசீர்வாதமும் எங்களுக்குக் கிடைக்கும். பரப்புரை மேடைகளில் அவர் ஏறமாட்டார்.

சு.கவின் தலைவர் பதவியிலிருந்து ஜனாதிபதி விலகவும் இல்லை. அரசியலில் இருந்து ஓய்வுபெறவும் மாட்டார். நவம்பர் 17ஆம் திகதிக்குப் பிறகு தலைமைப் பதவியை ஏற்பார்.

இலங்கை அரசியல் வரலாற்றில் சுதந்திரமான தேர்தலுக்கு வழிவகுக்கும் வகையில் ஜனாதிபதியொருவர் இவ்வாறு முடிவெடுத்தமை இதுவே முதல் தடவையாகும். சிறந்த முன்னுதாரணத்தை அவர் வழங்கியுள்ளார்.

கட்சியின் செயற்பாட்டாளர்களை ஒருபோதும் கைவிடமாட்டோம். அடையாளத்தையும், தனித்துவத்தையும் தொலைக்கமாட்டோம். எனவே, கட்சி எடுத்த முடிவை ஏற்குமாறு கட்சித் தொண்டர்களுக்கு அழைப்பு விடுக்கின்றோம்.

சந்திரிகா அம்மையார் வெளிநாடு சென்றுள்ளார். அவர் நாடு திரும்பியதும் அவருடனும் கலந்துரையாடுவோம்.

இலங்கைத் தொழிலாளர் காங்கிரஸின் பிரதிநிதிகள் எங்களைச் சந்தித்தனர். ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி தலைமையிலான ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணி எடுக்கும் தீர்மானத்துக்கு கட்டுப்படுவதாகவும் அவர்கள் தெரிவித்தனர்.

எனவே, ஜனாதிபதித் தேர்தலில் கோட்டாபய ராஜபக்சவை ஆதரிக்கும் நிலைப்பாட்டையே இலங்கைத் தொழிலாளர் காங்கிரஸின் தலைவர் ஆறுமுகன் தொண்டமான் எடுப்பார்” – என்றனர்.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்