உயிராபத்தை ஏற்படுத்தும் வவுனியா நகரசபை உறுப்பினர்

வவுனியா நகர சபை உறுப்பினர் ஒருவர் உயிராபத்தை ஏற்படுத்தும் டெங்கு நுளம்பு உற்பத்தியாகுவதற்கு காரணமாக இருந்த சம்பவம் ஒன்று தற்போது அம்பலமாகியுள்ளது. இவ்விடயம் தொடர்பாக மேலும் தெரியவருவதாவது

வவுனியா நகரசபை எல்லைக்குள் அமைந்துள்ள இறம்பைக்குளம் வட்டாரத்தில் தெரிவு செய்யப்பட்டுள்ள தமிழரசுக் கட்சி உறுப்பினர் ஒருவருக்கு 2019ம் ஆண்டுக்குரிய வருடாந்த பாதீட்டின் மூலம் இறம்பைக்குளம் வட்டாரத்திற்குட்பட்ட ஜோசப்வாஸ் ஒழுங்கையின் இருமருங்கிலும் கழிவு நீர் வாய்க்கால் அமைப்பதற்காக வவுனியா நகர சபையால் 1499686.40 ரூபா நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டிருந்தது.இவ் நிதி ஒதுக்கீட்டில் அமைக்கப்பட்ட கழிவு நீர் வாய்க்கால் செயற்திட்டமானது பூரணப்படுத்தப்படாமல் இடை நடுவில் வேலையை முடிவுறுத்தி அதற்கான ஒப்பந்த தொகையும் ஒப்பந்தகாரர்களுக்கு வழங்கப்பட்டுள்ளது.

வேலை முழுமையடையாமல் அரைகுறையில் விடப்பட்ட கழிவு நீர் வாய்க்காலில் மழை நீர்தேங்கி நுளம்புகள் பெருக்கெடுத்துள்ளன இதன்காரணமாக அப் பிரதேசத்தில் டெங்கு நுளம்பின் தாக்கத்தினால் சிறுவர்கள் முதல் பெரியவர்கள் வரை பாதிக்கப்பட்டுள்ளதுடன் இது தொடர்பாக மாவட்ட சுகாதார சேவைகள் பணிமனைக்கும் அப்பிரதேச மக்கள் தெரியப்படுத்தியுள்ளனர்.

மேலும் இவ் வேலைத்திட்டத்திற்காக ஒதுக்கப்பட்ட முழுமையான நிதிக்கும் இங்கு வேலை நடை பெறவில்லை என்பதோடு இவ்வேலையின் ஒப்பந்தகாரர்களான சகாயமாதாபுரம் சனசமூக நிலையத்தின் பெயராலும் குறித்த நகரசபை உறுப்பினராலும் பாரிய ஊழல் நடைபெற்றுள்ளதாக இப்பிரதேச மக்கள் தெரிவிக்கின்றனர்.

அத்துடன் இவ் செயற்திட்டம் முடிவடையாமல் எவ்வாறு வேலையின் திருப்தி சான்றிதழை (Satisfaction Report) வவுனியா நகரசபை தொழிநுட்ப உத்தியோகத்தர் வழங்கினார் எனவும் நகர சபை உறுப்பினரதும் அரச அதிகாரியினதும் பொறுப்பற்ற செயல் தொடர்பாக வவுனியா நகரசபை தலைவர் நடவடிக்கை எடுப்பாரா? எனவும் அப் பிரதேச மக்கள் கேள்வியெழுப்பியுள்ளதுடன் மக்களின் வரிபணத்தை இவ்வாறு மோசடி செய்யும் ஊழல் பேர்வழிகளையும் அவர்களுக்கு துணைபோகும் அரச அதிகாரிகளையும் சட்டத்திற்கு முன் நிறுத்தி தண்டனை பெற்றுக்கொடுக்கவேண்டும் எனவும் பாதிக்கபட்ட மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்