அரசியல் தீர்வு இனங்களிடையே பிளவுகளையே ஏற்படுத்துமாம்! – நிபந்தனைகளை ‘மொட்டு’ அணி ஏற்காது

தனிப் பௌத்த சிங்கள வாக்குகளை மாத்திரம் பெற்றுத் தேர்தலில் வெற்றி பெற வேண்டும் என்ற நோக்கம் ஸ்ரீலங்கா பொதுஜன முன்னணிக்குக் கிடையாது. ஆனால், தமது சுய நலனுக்காகத் தமிழ் மக்களை பகடைக்காயாகக் கொண்டு தமிழ் அரசியல்வாதிகள் முன்வைக்கும் நிபந்தனைகளுக்கு ஒருபோதும் உடன்பட முடியாது. அரசியல் தீர்வு இனங்களுக்கிடையில் மீண்டும் பிளவையே  ஏற்படுத்தும்.”

– இவ்வாறு நாடாளுமன்ற உறுப்பினர் செஹான் சேமசிங்க தெரிவித்தார்.

அவர் மேலும் கூறியதாவது:-

“அனைத்து இன மக்களின் ஆதரவையும் பெற்றே நாட்டின் தலைவர் தெரிவு செய்யப்பட வேண்டும். தனிப் பௌத்த, சிங்கள வாக்குகளை மாத்திரம் பெற எதிரணியினர் முயற்சிக்கின்றனர் என்று ஆளும் தரப்பினர் தமிழ் மக்கள் மத்தியில் தவறான நிலைப்பாட்டைத் தோற்றுவிக்க முயற்சிக்கின்றனர்.

2015ஆம் ஆண்டு  தமிழ் மக்களின் மத்தியில் கடந்த அரசு தொடர்பில் ஐக்கிய தேசியக் கட்சி தவறான சித்தரிப்புக்களையே முன்னெடுத்தது. இதுவே ஆட்சி மாற்றத்திற்கான முதன்மைக் காரணியாக அமைந்தது.

தமிழ் மக்களுக்கு பல்வேறு  வாக்குறுதிகளை வழங்கிய அரசு கடந்த  ஐந்து ஆண்டுகளாக எதையும் நிறைவேற்றவில்லை.

வடக்கு மக்களுக்கு அரசியல் தீர்வும், மலையக மக்களுக்கு நியாயமான சம்பளமும், உட்கட்டமைப்பு விருத்தியும் வழங்ப்படும் என்று கூறப்பட்டது. அரசியல் தீர்வு வடக்கு மக்களின் தேவையாகக் காணப்படவில்லை. தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தேவையாகக் காணப்பட்டது. அபிவிருத்தி தொடர்பில் கருத்துரைத்தால், அரசியல் தீர்வு செயலிழக்கப்படும் என்பதே  கூட்டமைப்பின் கருத்தாகக் காணப்பட்டது.

ஆகையால் அவர்கள் வடக்கு மக்களின் அடிப்படை பிரச்சினைகளுக்கு ஒருபோதும் கவனம் செலுத்தவில்லை.
அரசியல் தீர்வு இனங்களுக்கிடையில் மீண்டும் பிளவையே  ஏற்படுத்தும். தமிழ் மக்களை பகடைக்காயாகக் கொண்டு தமிழ் தலைவர்கள் முன்வைக்கும் நிபந்தனைகள் பொருத்தமற்றது. எனவே, தமிழ் மக்களின் ஆதரவை மாத்திரம் கோருகின்றோம்.

அரசில் அங்கம் வகிக்கும் கூட்டமைப்பினர் உட்படத் தமிழ் மக்களின் பிரதிநிதிகள் எவரும் தமிழ் மக்களின் அடிப்படை பிரச்சினைகளுக்கு முக்கியத்துவம் செலுத்தவில்லை. தமிழ் மக்கள் இந்தமுறை அரசியல் ரீதியில் தனித்த தீர்மானங்களையே முன்னெடுக்க  வேண்டும். போலியான அரசியல் பரப்புரைகளுக்கு ஏமாற வேண்டாம்” – என்றார்.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்