அம்பாறை மாவட்ட அரசியல்வாதிகளினால் கைவிடப்பட்ட 5 கிராமங்களின் 63 வருடகாலக் கனவு நனவாகும் நாள்

25 இலட்சம் ரூபா நிதியின் கீழ் அக்கரைப்பற்று கரடி பாலை வீதி மற்றும் மொட்டையன்ட வெளி பிரதேச வீதிகளும் அட்டாளைச்சேனை பிரதேச சம்புநகர், தீகவாபி மற்றும் ஆலங்குளம் போன்ற பிரதேச வீதிகளுக்கும் கொங்றீட் இடும் பணியின் முதற்கட்ட வேலைகள் நேற்று (09)  அக்கரைப்பற்று மேற்கு கமநல சேவை நிலையத்தின் மெட்ரோ விவசாய அமைப்பின் தலைவரும், அக்கரைப்பற்று பிரதேச சபையின் முன்னாள் உதவித் தவிசாளருமாகிய ஐ.எல்.ஏ.ஹக்கீம் தலைமையில் ஆரம்பித்து வைக்கப்பட்டது.
கடந்த 1956 ஆம் ஆண்டிலிருந்து இன்று வரையான காலம் வரை குறித்த பிரதேசத்தில் வாழ்கின்ற மக்களும், பாடசாலை மாணவர்களும், விவசாயிகளும், வாகன சாரதிகளும் பல இன்னல்களையும், விபத்துக்களையும் எதிர்கொண்டு வந்தனர். இவ்விடயம் தொடர்பில் அம்பாறை மாவட்டத்திலுள்ள அமைச்சர்கள், பாராளுமன்ற உறுப்பினர்கள், மாகாண சபை உறுப்பினர்கள் ஆகியோரின் கவனத்திற்கு பல முறை எடுத்துரைத்தும் அவர்கள் அதனைச் செய்துதர முன்வரவில்லை என்று  அக்கரைப்பற்று மேற்கு கமநல சேவை நிலையத்தின் மெட்ரோ விவசாய அமைப்பின் தலைவரும், அக்கரைப்பற்று பிரதேச சபையின் முன்னாள் உதவித் தவிசாளருமாகிய ஐ.எல்.ஏ.ஹக்கீம் இதன்போது கருத்துத் தெரிவித்தார்.
அவர் மேலும் தெரிவிக்கையில்,
நீண்ட காலத் தேவையாகவும், அம்பாறை மாவட்ட அரசியல்வாதிகளினால் புரக்கணிப்பு செய்யப்பட்டு கைவிடப்பட்ட குறித்த பிரதேசங்களிலுள்ள வீதிகளின் அவல நிலையையும், அப்பிரதேசத்தில் வாழ்ந்து வருகின்ற அம்மக்களின் கஷ்ட நிலைமைகளைப் பற்றியும், மாணவர்கள் மற்றும் விவசாயிகள், வாகன சாரதிகள் அன்றாடம் எதிர்நோக்கி வருகின்ற துன்பங்கள் பற்றிய விடயங்களை கடந்த வருடம் கிழக்கு மாகாண விவசாயத் திணைக்கள விவசாய போதனை ஆசிரியர் எஸ்.எல்.அஸ்கரிடம் எடுத்துரைத்து எனது கோரிக்கை ஒன்றினையும் சமர்ப்பித்தமைக்கு அமைவாகவே, இந்நிதி கிழக்கு மாகாண விவசாய திணைக்கள பணிப்பாளர் எஸ்.எம்.ஹுசைனினால் கிடைப்பெற்றுள்ளதாகவும் சுட்டிக்காட்டினார்.
இந்த வீதிகள் யாவும் கொங்றீட் இடப்பட்டு பொதுமக்களின் பாவனைக்கு வழங்குவதன் மூலம் 63 வருடகாலக் கனவும், குறித்த பிரதேசத்தில் வாழ்கின்ற பொது மக்களும், பாடசாலை மாணவர்களும், விவசாயிகளும், வாகன சாரதிகளும் பெரிதும் பயனடையுள்ளனர் என்றும் இதற்கு உதவியாக இருந்த கிழக்கு மாகாண விவசாயத் திணைக்கள விவசாய போதனை ஆசிரியர் எஸ்.எல்.அஸ்கர் நிதியுதவி வழங்கிய மாகாண விவசாய திணைக்கள பணிப்பாளர் எஸ்.எம்.ஹுசைன், அம்பாரை மாவட்ட விவசாய பிரதிப் பணிப்பாளர் டீ.எம்.எஸ்.பி.திசாநாயக, உதவி பணிப்பாளர் ஏ.ரவீந்தரன் ஆகியோருக்கு பொதுமக்கள் நன்றியை தெரிவித்தனர்.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்