நீதிபதிகளை தெரிவு செய்யும் தேர்தல் அல்ல – கோட்டாவிற்கு தம்பர அமில தேரர் பதிலடி!

மஹிந்த ராஜபக்ஸ குடும்பத்தின் தேவைகளுக்காக இலங்கை இராணுவம் மற்றும் கடற்படையினர் தவறான முறையில் பயன்படுத்தப்பட்டதாக குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.

புதிய ஜனநாயக முன்னணியின் முதலாவது ஜனாதிபதித் தேர்தல் பிரசாரக் கூட்டம் காலி முகத்திடலில் நேற்று(வியாழக்கிழமை) நடைபெற்றது.

‘ஒன்றாக முன்னோக்கி செல்வோம்’ என்ற தொனிப்பொருளில் இந்த பிரசாரக்கூட்டம் நடைபெற்றது.

இந்த பிரசாரக் கூட்டத்தில் பங்கேற்று உரையாற்றிய போதே கலாநிதி தம்பர அமில தேரர் இவ்வாறு குற்றம் சுமத்தியுள்ளார்.

இதன்போது அங்கு தொடர்ந்தும் கருத்து வெளியிட்ட அவர், ‘அனுராதபுரம் சல்காது மைதானத்தில் நடைபெற்ற முதலாவது கூட்டத்தில் தான் நவம்பர் 17ஆம் திகதி ஜனாதிபதியானதும் அநீதியாக சிறையில் அடைக்கப்பட்டுள்ள இராணுவ வீரர்களை விடுதலை செய்வதாக கோட்டாபய ராஜபக்ஸ கூறியுள்ளார்.

அநீதியான முறையில் அவர்களை சிறையில் அடைத்தது யார் என கேட்கின்றேன். மஹிந்த ராஜபக்ஸ குடும்பத்தின் தேவைகளுக்காக இலங்கை இராணுவம் மற்றும் கடற்படை வீரர்களைத் தவறான முறையில் பயன்படுத்தி ஊடகவியலாளர்களை கொலை செய்வதற்கு அனுப்பினர்.

அவர்களை ஊடகவியலாளர்களைக் கடத்துவதற்கும் கப்பம் பெறுவதற்கும் அழைத்துச் சென்றனர். அவ்வாறு குற்றச்செயல்களில் ஈடுபடுவதற்காக அழைத்துச் செல்லப்பட்டவர்களே இன்று சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்டுள்ளனர்.

அவர்கள் சந்தேகநபர்கள். அவர்கள் குற்றவாளிகள் என நீதிமன்றத்தில் உறுதிப்படுத்தப்படவில்லை. அவர்களை விடுதலை செய்வதாக தற்போது இவர் கூறுகின்றார்.

நவம்பர் 16ஆம் திகதி ஜனாதிபதியை தெரிவு செய்யும் தேர்தலே நடைபெறவுள்ளது. நீதிபதிகளை தெரிவு செய்யும் தேர்தல் அல்ல’ எனக் குறிப்பிட்டுள்ளார்.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்