இரத்தக்கறை படிந்த தலைவர் இந்த நாட்டுக்கு அவசியமில்லை” – நவீன் திசாநாயக்க

இரத்தக்கறை படிந்த தலைவர் இந்த நாட்டுக்கு அவசியமில்லை என அமைச்சர் நவீன் திசாநாயக்க தெரிவித்துள்ளார்.

தேசிய ஜனநாயக முன்னணியின் ஜனாதிபதி வேட்பாளர் சஜித் பிரேமதாசவின் முதலாவது தேர்தல் பரப்புரைக் கூட்டம் தற்போது காலி முகத்திடலில் நடைபெற்று வருகின்றது. இதில் கலந்துகொண்டு உரையாற்றியபோதே அமைச்சர் மேற்கண்டவாறு கூறினார்.

அவர் மேலும் தெரிவிக்கையில், “இது ஒரு இளம் தலைவரின் வருகையை குறிக்கிறது. நம் நாட்டின் வரலாற்றில் இது ஒரு திருப்புமுனை. ஐக்கிய தேசிய கட்சியில் உள்ள அனைத்து குழுக்களும் ஒன்றிணைந்து சஜித் பிரேமதாசவை இலங்கையின் ஜனாதிபதியாக தேர்வு செய்துள்ளன.

கோட்டபாய ராஜபக்ஷவுக்கு மக்களின் விருப்பு வெறுப்பு தெரியாது. இந்த நாட்டின் மக்கள் அவர்களுடன் சேர்ந்து அடிமட்டத்தில் இருந்து எழுந்த ஒருவரையே நாட்டின் ஜனாதிபதியாக தேர்ந்தெடுப்பார்கள்.

இரத்தக்கறை படிந்த தலைவர் ஒருவர் இந்த நாட்டுக்கு அவசியமில்லை. கோட்டாபய ஜனாதிபதியானால், மஹிந்த பிரதமராக இருப்பார், பசில் மற்றும் நாமல் ஆகியோர் அமைச்சரவையில் இருப்பார்கள்.

மற்ற உறவினர்கள் அனைவரும் உயர் பதவிகளில் இருப்பார்கள் என்பது எங்களுக்குத் தெரியும். இந்த வகையான குடும்ப அரசியலை நாட்டிற்குள் மீண்டும் கொண்டுவர நாம் அனுமதிக்க மாட்டோம்.” என கூறினார்.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்