வவுனியாவில் முச்சக்கர வண்டி சாரதி எரியூட்டபட்ட நிலையில் சடலமாக மீட்பு

வவுனியாவில் இளம் குடும்பத்தலைவர் ஒருவர் நேற்றையதினம் காணாமற்போன நிலையில் அவரது சடலம் எரியூட்டப்பட்ட நிலையில் மீட்கப்பட்டுள்ளதாக வவுனியா பொலிஸார் தெரிவித்தனர்.

அவர் கடத்திச் செல்லப்பட்டு கொலை செய்யப்பட்டுள்ளார் என்று தடயங்களை வைத்து பொலிஸார் தெரிவித்தனர்.
வவுனியா கள்ளிக்குளம் பகுதியிலுள்ள பற்றைக்குள்ளிலிருந்து அவர் இன்று முற்பகல் சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.

வவுனியா சின்னப்புதுக்குளம் பகுதியைச் சேர்ந்த சுகந்தன் (வயது-27) என்ற இளம் குடும்பத்தலைவரே இவ்வாறு சடலமாக மீட்கப்பட்டார்.

கோவில்குளம் சந்தியில் நின்று முச்சக்கரவண்டி வாடகைக்குச் செலுத்தி வந்த நிலையில் நேற்று மதியம் 2 மணியளவில் வவுனியா நகருக்கு பயணித்த நிலையிலேயே காணாமற்போனார் என்று உறவினர்களால் வவுனியா பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்யப்பட்டது.

இளம் குடும்பத்தலைவர் இறுதியாக வவுனியா கள்ளிகுளம் பகுதியில் நின்றுள்ளதாக அவரது தொலைபேசி தரவுகள் (ஜிபிஎஸ்) வெளிக்காட்டியுள்ளன.

அதனடிப்படையில் முச்சக்கர வண்டி ஓட்டுனர்கள், பொலிஸார் முன்னெடுத்த தேடுதலின் அடிப்படையில் கள்ளிக்காடு பற்றைக் காணிக்குள்ளிலிருந்து இளம் குடும்பத்தலைவர் எரியூட்டப்பட்ட நிலையில் சடலமாக காணப்பட்டார். சடலம் காணப்பட்ட இடத்திற்கு அண்மையில் குறித்த நபரின் முச்சக்கர வண்டியும் பொலிசாரால் மீட்கப்பட்டுள்ளது.

குறித்த நபரது மனைவி வெளிநாட்டில் வசித்து வருகிறார் இவரிற்கு ஒரு குழந்தை உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
சம்பவம் தொடர்பில் வவுனியா தடயவியல் பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.

 

 

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்