தமிழர்களை கொன்றவர்களே தற்போது அவர்களின் நலன் குறித்து பேசுகின்றனர் – வேலுகுமார்

தமிழ் மக்களை கொத்துக்கொத்தாக கொன்றுகுவித்தவர்களே தற்போது தமிழர்களின் நலன் குறித்து கருத்துரைப்பதாக ஜனநாயக மக்கள் முன்னணியின் பிரதித் தலைவர் வேலுகுமார் தெரிவித்தார்.

வாக்குவேட்டைக்காக பேரினவாதத்தையும் சிங்கள, பௌத்த மேலாதிக்கத்தையும் மட்டுமே முன்னிலைப்படுத்தி அரசியல் நடத்தும் கூட்டு எதிரணியின் பக்கம், அரசியல் கைக்கூலிகளாக சில தமிழ், முஸ்லிம் பிரமுகர்கள் செயற்படுவது வெட்கி தலைகுனியவேண்டிய விடயமென்றும் அவர் குறிப்பிட்டார்.

புதிய ஜனநாயக முன்னணியின் ஜனாதிபதி வேட்பாளர் சஜித் பிரேமதாசவுக்கு ஆதரவு திரட்டி கண்டியில் இன்று (வெள்ளிக்கிழமை) காலை நடைபெற்ற தேர்தல் பிரசாரக் கூட்டத்தில் கலந்துகொண்டு உரையாற்றுகையிலேயே அவர் மேற்கண்டவாறு கூறினார்.

இதன்போது அவர் மேலும் தெரிவிக்கையில், “தேர்தல் பரப்புரைகள் ஆரம்பமாகியுள்ள நிலையில், தமிழ் பேசும் மக்களின் வாக்குகளை கொள்ளையடிப்பதற்காக வழமைபோல் ‘நல்லவர்கள்’ வேடம் பூண்டு ராஜபக்ஷக்களும் அவர்களின் சகாக்களும் பல்வேறு உறுதிமொழிகளை வாரி வழங்கிவருகின்றனர்.

அவர்களின் சொல் ஜாலங்களைக்கண்டு ஏமாந்து வாக்குகளை வாரி வழங்குவதற்கு தமிழ் பேசும் மக்கள் கொண்டைகட்டிய சீனர்கள் அல்லர் என்பதை ராஜபக்ஷ படையணி புரிந்துகொள்ள வேண்டும்.

தாங்கள் ராஜபக்ஷக்களுக்கு எதிரானவர்கள் என அடையாளப்படுத்திக்கொண்டு மறைமுகமாக கூட்டு எதிரணியை வலுப்படுத்துவதே சிலரின் உள்நோக்கமாகும்.

மறுபுறத்தில் தமிழ், முஸ்லிம் வாக்குகளை சிதறடிப்பதற்காக சிலர் வேண்டுமென்றெ ஜனாதிபதி தேர்தலில் களமிறங்கியுள்ளனர். எனவே, வழமையைவிடவும் மக்கள் இம்முறை விழிப்பாகவே இருக்கவேண்டும்.

அதேபோல் தமிழ் மக்களை கொத்துக்கொத்தாக கொன்றுகுவித்தவர்கள் இன்று வடக்குக்கு சென்று அலுவலகங்களை திறந்து, தாங்கள்தான் தமிழர்களின் மீட்பார் என காட்டிக்கொள்ள முயற்சிக்கின்றனர். எந்த முகத்தை வைத்துக்கொண்டு வடக்கு மக்களிடம் ராஜபக்ஷ படையணி வாக்கு கோருகின்றது?” என்றும் அவர் கேள்வியெழுப்பியுள்ளார்.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்