நாட்டுக்கு உதவாத வௌிநாட்டு உடன்படிக்கைகள் தேவையில்லை – சஜித்

வௌிநாட்டு வர்த்தக, பாதுகாப்பு மற்றும் அரசியல் உடன்படிக்கைகள் முக்கியமானவை என்றாலும் அவற்றால் நாட்டிற்கு சாதகத்தன்மை காணப்பட வேண்டும் என புதிய ஜனநாயக முன்னணியின் ஜனாதிபதி வேட்பாளர் அமைச்சர் சஜித் பிரேமதாச தெரிவித்துள்ளார்.

‘புதிய தலைமைத்துவம் புதிய இலங்கை’ எனும் தொனிப்பொருளில் கொழும்பு மன்றக் கல்லூரியில் பல்கலைக்கழக தொழில்சார் பிரதிநிதிகள் சிலரை இன்று (வெள்ளிக்கிழமை) சஜித் பிரேமதாச சந்தித்தார்.

இந்த சந்திப்பில் பல்கலைக்கழக பேராசிரியர்கள் உள்ளிட்டோர் கலந்துகொண்டிருந்த நிலையில் உரையாற்றும் போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டார்.

இந்நிகழ்வில் உரையாற்றிய அவர், “அண்மைக்காலமாக ACSA, SOFA, MCC என பலவற்றின் பெயர்களைக் கூறுகின்றனர். பல்வேறு உடன்படிக்கைகள் தொடர்பாக பரவலாக பேசப்படுகின்றது. அவ்வாறான உடன்படிக்கைகளின் கடன் குறித்து ஆராய வேண்டும்.

இதன் அனைத்து விடயங்களையும், தனிப்பட்ட விடயங்களை ஒதுக்கிவிட்டு நாட்டை மையப்படுத்தியே ஆராய வேண்டும். குறித்த உடன்படிக்கைகளில் தனிநபர்கள் கையொப்பமிட்டாலும் அது எமது நாட்டிற்கே தாக்கம் செலுத்தும்.

ஆகவே, மிகவும் விஞ்ஞானப்பூர்வமாக இந்த உடன்படிக்கை குறித்து மதிப்பிடுவதற்கு நாம் முயற்சிக்கும்போது, துறைசார்ந்த உள்நாட்டு பங்குதாரர்களை இணைத்துக்கொண்டு மிகவும் இலகுவாக செலவு மற்றும் இலாபத்தை ஆய்வு செய்ய முடியும். அத்துடன் சாதக பாதகம் குறித்தும் ஆராய முடியும்” என்று தெரிவித்தார்.

 

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்