பொதுஜன பெரமுனவின் வாக்குகளை சிதறடிக்க 35 வேட்பாளர்கள் களமிறக்கப்பட்டுள்ளனர்- மஹிந்த

ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் வாக்குகளை சிதறடிக்கும் நோக்கிலேயே 30இற்கும் மேற்பட்ட வேட்பாளர்கள் களமிறக்கப்பட்டுள்ளார்கள் என்று எதிர்க்கட்சித் தலைவரான மஹிந்த ராஜபக்ஷ குற்றஞ்சாட்டியுள்ளார்.

குருநாகலில் இடம்பெற்ற மக்கள் சந்திப்பிலேயே அவர் இவ்வாறு கூறினார். மஹிந்த மேலும் கூறியுள்ளதாவது,  “ஜனாதிபதித் தேர்தலில் 30 இற்கும் அதிகமான வேட்பாளர்கள் களமிறங்கியுள்ளார்கள்.

எமது வாக்குகளை சிதறடிக்கவே இத்தனை எண்ணிக்கையிலான வேட்பாளர்கள் களமிறக்கப்பட்டுள்ளார்கள். எமது வாக்குகளை அவ்வளவு இலகுவாக யாராலும் உடைக்க முடியாது.

நாம், ஐக்கிய தேசியக் கட்சியின் பிரசாரக் கூட்டத்தை தொலைக்காட்சி ஊடாக பார்த்தோம். அதில், எம்மை தாக்கித்தான் அவர்கள் பேசிக்கொண்டிருக்கிறார்கள்.

2015 ஆம் ஆண்டு தேர்தலில் எவ்வாறு கூறினார்களோ அதையேதான் இன்னும் கூறிக்கொண்டிருக்கிறார்கள்.

ஆனால், இவர்கள் கடந்த 4 வருடங்களாக செய்த எதையும் கூறவில்லை. மத்திய வங்கியின் பிணை முறி மோசடி தொடர்பாக பேசவில்லை.

அரசியல் பழிவாங்கலைத்தான் இன்னும் செய்துக்கொண்டிருக்கிறார்கள். இதனால்தான் அவர்களால் நாட்டை முன்னேற்ற முடியவில்லை.

இவர்களால், மாகாணசபைத் தேர்தலைக்கூட நடத்தமுடிவில்லை. இதுதான் இவர்களின் ஜனநாயகமா மக்கள் எம்முடன்தான் இருக்கிறார்கள். இதனால், எமது வெற்றி இப்போதே உறுதி ஆகிவிட்டது” என குறிப்பிட்டுள்ளார்.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்