அரசியல் அனுபவமிக்க ஒருவரே ஜனாதிபதியாக பதவியேற்க வேண்டும்- சம்பிக்க

இலங்கைக்கு அரசியல் அனுபவமிக்க ஒருவரே அடுத்த ஜனாதிபதியாக பதவியேற்க வேண்டுமென அமைச்சர் சம்பிக்க ரணவக்க தெரிவித்துள்ளார்.

கொழும்பில் இடம்பெற்ற நிகழ்வொன்றிலேயே அவர் இவ்வாறு கூறினார். சம்பிக்க ரணவக்க மேலும் கூறியுள்ளதாவது, “இந்த அரசாங்கம், மக்களின் உரிமையை உறுதிப்படுத்தியுள்ளது. மக்களின் குரலை அரசாங்கம் ஒடுக்கவில்லை.

போராட்டங்களை நடத்தக்கூட சுதந்திரக் கொடுத்தது. கொலை, கடத்தல், காணாமல் ஆக்குதல் போன்ற எந்தவொரு செயற்பாடுகளையும் அரசாங்கம் செய்யவில்லை.

எமது ஆட்சியில் ஜனாதிபதிக்கூட நீதிமன்றுக்குக் கட்டுப்பட்ட ஒருவராகவே கருதப்படுகிறார். இது எமக்கான வெற்றியாகும். இதனையிட்டு நாம் மகிழ்ச்சியடைகிறோம். எனினும், எமது அரசாங்கம் தொடர்பாக பிழையான கருத்துக்கள் வெளியிடப்படுகின்றன.

ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவினர்தான் இந்த நாட்டுக்கு ஆதரவானவர்கள் என்பதுபோல பேசிக்கொண்டிருக்கிறார்கள். அமெரிக்க பிரஜைகள்தான் இன்று தேசியவாதிகளாக காண்பிக்கப்படுகிறார்கள்.

ஆனால், எமது வேட்பாளர் இலங்கையில் பிறந்து இலங்கையில் வளர்ந்த ஒரு இலங்கைப் பிரஜையாவார்.

இந்த நாட்டுக்கு அரசியல் அனுபவமிக்க ஒரு தலைவர்தான் தேவைப்படுகிறார்.  இதனால்தான் 20 வருடங்கள் அரசியல் அனுபவம் கொண்ட சஜித் பிரேமதாஸவை நாம் களமிறக்கியுள்ளோம்” என குறிப்பிட்டுள்ளார்.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்