கம்பளை ஆசிரியர் உயிரிழப்பு- நீதிமன்றம் முக்கிய அறிவிப்பு

ம்பளை- கீரபன பகுதியிலுள்ள நீர்த்தேக்கத்தில் இருந்து கண்டெடுக்கப்பட்ட ஆசிரியையின் உடல் பாகங்களை மேலதிக ஆய்விற்காக அரச பகுப்பாய்வு திணைக்களத்திற்கு அனுப்பி வைக்குமாறு நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது.

குறித்த ஆசிரியர் உயிரிழந்தமைக்கான காரணம் குறித்து பொலிஸாரினால் தயாரிக்கப்பட்ட அறிக்கை, கம்பளை நீதிமன்றத்தில் நேற்று (வெள்ளிக்கிழமை) விசாரணைக்கு எடுத்துகொள்ளப்பட்டது.

அவ்வறிக்கையில்,  ‘குறித்த பகுதியிலுள்ள கால்வாய்க்குள் விழுந்ததன் ஊடாகவே  ஆற்றில்  அவர் அடித்து செல்லப்பட்டிருக்க வேண்டும்.

இதனை மேலதிக பரிசோதனையின்  பின்னரே  உறுதிப்படுத்த முடியும்’ என குறிப்பிடப்பட்டுள்ளது.

அதனைத் தொடர்ந்து கம்பளை பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரியை அழைத்து, நிலைமையை கேட்டறிந்து கொண்ட நீதிபதி, உடல் பாகங்களை அரச பகுப்பாய்வு திணைக்களத்திற்கு அனுப்பி வைக்க உத்தரவிட்டுள்ளார்.

கடந்த 1ஆம் திகதி, செவ்வந்தி நிசன்சலா ரத்னாயக்க (27) என்ற ஆசிரியை பாடசாலையிலிருந்து  வீடு திரும்பியிருந்த வேளையில் காணாமல் போயிருந்தார்.

இவ்விடயம் குறித்து தகவல் கிடைக்கப்பெற்ற பொலிஸார், அவ்விடத்திற்கு வருகைதந்து தேடுதல் நடவடிக்கையில் ஈடுபட்டனர்.

இதன்போது அவர்களுடன் இணைந்து உயிரிழந்தவரின் குடும்பத்தினர் மற்றும் அப்பிரதேச மக்கள் அனைவரும் தேடினர். ஆனால் கிடைக்கவில்லை.

இந்நிலையில் கடந்த 7ஆம் திகதி விக்டோரியா நீர்த்தேக்கத்தில் மிதந்த  நிலையில்ஆசிரியரின் சடலம் கண்டெடுக்கப்பட்டது.

இவர், குறித்த பகுதியிலுள்ள பாதையில் சென்று கொண்டிருந்தபோது, வழுக்கி கால்வாய்க்குள் விழுந்து, நீரில் அடித்து சென்றிருக்கலாமென பொலிஸார்  சந்தேகம் வெளியிட்டனர்.

ஆனாலும் ஆசிரியரின் மரணம் குறித்து வெவ்வேறு கருத்துக்களை பலர் வெளியிடுகின்றமையினால், மரணத்திற்கான உண்மையான காரணத்தை கண்டறியும் பொருட்டு அவரின் உடற்பாகங்களை மேலதிக ஆய்விற்காக அரச பகுப்பாய்வு திணைக்களத்திற்கு அனுப்புவதற்கு நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்