கோண்டாவில் இரும்பக உரிமையாளர் கொலை சம்பவம்: முதலாவது சந்தேகநபர் ஆதாரமின்றி விடுதலை!

கோண்டாவில் உப்புமடச் சந்தி இரும்பக உரிமையாளரைத் தாக்கி, கொலை செய்த குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்ட, முதலாவது சந்தேக நபர் வழக்கிலிருந்து விடுக்கப்பட்டுள்ளார்.

இந்த கொலை தொடர்பான வழக்கு விசாரணை நேற்று (வெள்ளிக்கிழமை) யாழ்ப்பாணம் நீதிமன்ற மேலதிக நீதிவான் காயத்திரி சைலவன் முன்னிலையில் எடுத்துக் கொள்ளப்பட்ட போதே, அவர் மீது போதிய ஆதரங்கள் இல்லாத நிலையில் அவர் விடுவிக்கப்பட்டார்.

எனினும் குறித்த சந்தேக நபருக்கெதிராக கொக்குவில் ரயில் நிலைய அதிபரைத் தாக்கிய குற்றச்சாட்டை முன்வைத்து மற்றொரு வழக்கை யாழ்ப்பாணம் பொலிஸார் தாக்கல் செய்துள்ளனர்.

அத்துடன், இரும்பக உரிமையாளரது கொலைக் குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்ட மற்றொரு இளைஞன், எதிர்வரும் 24ஆம் திகதிவரை விளக்கமறியலில் வைக்க யாழ்ப்பாணம் நீதிவான் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

கடந்த செம்டெம்பர் 6ஆம் திகதி மாலை 4 மணியளவில், கோண்டாவில் உப்புமடச் சந்தியில் அமைந்துள்ள லக்சுமி இரும்பகத்தின் உரிமையாளரான 47 வயது கந்தையா கேதீஸ்வரன், இனந்தெரியாத கும்பலொன்றினால் தாக்குதலுக்கு உள்ளாகினார்.

இதனையடுத்து உயிராபத்தான நிலையில் யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்த அவர், 24 நாட்கள் சிகிச்சையின் பின்னர் அவர் கடந்த 30ஆம் திகதி இரவு உயிரிழந்தார்.

இந்தத் தாக்குதல் சம்பவத்துடன் தொடர்புடையவர்களின் ஒளிப்படங்கள் மற்றும் சிசிரிவி காணொளிகள் பொலிஸாரினால் வெளியிடப்பட்டிருந்த நிலையில், தாக்குதலை மேற்கொண்ட இருவரையும் பொலிஸார் தீவிரமாக தேடி வந்தனர்.

இந்த நிலையில், கடந்த செவ்வாய்க்கிழமை தலைமறைவாகியிருந்த கொக்குவிலைச் சேர்ந்த இருவரில் ஒருவர் கிளிநொச்சியில் வைத்து கைது செய்யப்பட்டார். அந்த இளைஞரே 48 மணிநேரங்கள் விசாரணைக்கு உட்படுத்தப்பட்ட பின்னர், தற்போது போதிய ஆதாரங்கள் இன்றி விடுவிக்கப்பட்டுள்ளார்.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்