இ.தொ.கா.வின் ஆதரவு கோட்டாவுக்கா? – தீர்மானம் இன்று

னாதிபதி தேர்தலில் யாருக்கு ஆதரவு வழங்குவது என்பது தொடர்பான முடிவை ஆறுமுகன் தொண்டமான் தலைமையிலான இலங்கை தொழிலாளர் காங்கிரஸ்  அறிவிக்கவுள்ளது.

இலங்கை தொழிலாளர் காங்கிரசின் தேசிய சபைக் கூட்டத்தை அடுத்து இந்த முடிவு இன்று (ஞாயிற்றுக்கிழமை) பிற்பகல் அறிவிக்கப்படும் என கட்சி நிர்வாகி ஒருவர் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக, இ.தொ.கா. தலைவர் ஆறுமுகன் தொண்டமான் பல்வேறு அரசியல் கட்சிகளுடன் பேச்சுக்களை நடத்தியிருந்தார்.

அத்தோடு தோட்டத்தொழிலாளர்களின் 32 பிரச்சினைகளை முன்னிறுத்தியே, எந்த வேட்பாளரை ஆதரிப்பது என்ற முடிவை இ.தொ.கா. எடுக்கவுள்ளது.

இதேவேளை ஜனாதிபதி தேர்தலில் கோட்டாபய ராஜபக்ஷவை இலங்கை தொழிலாளர் காங்கிரஸ் ஆதரிக்கும் என ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின் பொதுச்செயலாளர் மகிந்த அமரவீர அண்மையில் தெரிவித்திருந்தார்.

எனினும் இதனை மறுத்து  இ.தொ.கா.வின் மூத்த உதவித் தலைவரும் பொருளாளருமான எம்.ராமேஸ்வரன் அறிக்கை வெளியிட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

எதிர்வரும் நவம்பர் மாதம் 16ஆம் திகதி ஜனாதிபதி தேர்தல் இடம்பெறவுள்ளது. கட்சிகளின் வேட்பாளர்கள் அறிவிக்கப்பட்டு வேட்புமனு தாக்கல் செய்யப்பட்டுள்ள நிலையில், ஜனாதிபதி வேட்பாளர்கள் தமது பிரசாரங்களை முன்னெடுத்து வருகின்றனர்.

அத்தோடு வேட்பாளர்களுக்கான ஆதரவையும் ஒவ்வொரு கட்சியினரும் அறிவித்து வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்