சிவாஜிக்கு எதிராக கட்சி நடவடிக்கை எடுக்ககூடாது – யாழ். மாவட்டக் குழு தீர்மானம்?

ஐனாதிபதி தேர்தலில் போட்டியிடும் எம்.கே. சிவாஜிலிங்கத்திற்கு எதிராக கட்சி நடவடிக்கைளை எடுக்கக்கூடாதென கட்சியின் யாழ். மாவட்டக் குழு தீர்மானமொன்றை எடுத்துள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.

இத்தீர்மானத்தை இன்று நடைபெறவிருக்கும் கட்சியின் தலைமைக் குழுக் கூட்டத்திலும் தெரியப்படுத்துவதற்கும் தீர்மானிக்கப்பட்டுள்ளதாக தெரியவருகிறது.

ரெலோவின் அரசியல் உயர்பீடம் இன்று (ஞாயிற்றுக்கிழமை) ஒன்றுகூடவுள்ளது.

வவுனியாவில் இடம்பெறவுள்ள இந்த கூட்டத்தில் ஜனாதிபதி வேட்பாளர் எம்.கே.சிவாஜிலிங்கம் கட்சியின் கட்டுப்பாடுகளை மீறியுள்ளமை குறித்து ஆராயப்படவுள்ளது. இதன்போதே இத்தீர்மானம் குறித்து யாழ். மாவட்டக் குழு தெரிவிக்கவுள்ளது.

கட்சியின் யாழ். மாவட்டக் குழு நேற்று மாலை ஒன்றுகூடி கலந்துரையாடலில் ஈடுபட்டது.

இதன்போது ஐனாதிபதி தேர்தலில் போட்டியிடும் பிரதான வேட்பாளர்கள் தமிழ் மக்களின் பிரச்சனைகளுக்கான தீர்வு விடயத்திலும் ஏனைய பிரச்சினைகளுக்கான தீர்விற்கும் வழங்கப் போகும் எழுத்து மூல வாக்குறுதிகளையும் ஆராய்ந்து அதன் பின்னர் தேர்தல் குறித்து கட்சி ஒரு நிலைப்பாட்டை எடுக்க வேண்டுமென்றும் வலியுறுத்தப்பட்டுள்ளது.

அதுவரையில் சிவாஜிலிங்கம் மீது கட்சி கடும் நடவடிக்கைகளை எடுக்கக் கூடாதென்றும் கட்சியில் வழமையாக எடுக்கப்படுகின்ற நடவடிக்கைகள் எடுக்கலாமெனவும் தீர்மானிக்கப்பட்டுள்ளது.

இவ்வாறு மாவட்டக் குழுக் கூட்டத்தில் எடுக்கப்பட்ட தீர்மானத்தை இன்று நடைபெறவிருக்கும் கட்சியின் தலைமைக் குழுக் கூட்டத்திற்கும் தெரியப்படுத்துவதென்றும் முடிவெடுக்கப்பட்டுள்ளது.

ஐனாதிபதி தேர்தல் தொடர்பாக தமிழ் தேசியக் கூட்டமைப்பு அதிலும் குறிப்பாக பங்காளிக் கட்சிகளில் ஒன்றான ரெலோ இதுவரையில் எந்தவிதமான முடிவுகளையும் எடுக்காத நிலையில், அக்கட்சியின் தவிசாளர் சிவாஜிலிங்கம் சுயேட்சையாக ஐனாதிபதித் தேர்தலில் களமிறங்கியுள்ளார்.

இவ்வாறு தேர்தலில் சிவாஜிலிங்கம் போட்டியிடுவதற்கு கட்சியின் உயர் மட்டத்தில் கடும் எதிர்ப்புக்கள் வெளியிடப்பட்டு வருகின்றன.

குறிப்பாக சிவாஜிலிங்கம் போட்டியிடுவதற்கும் கட்சிக்கும் எந்த சம்மந்தமும் இல்லை என்றும் சிவாஜிலிங்கம் மீது கட்சி நடவடிக்கை எடுக்கும் என்றும் கட்சியின் தலைவரும் நாடாளுமன்ற உறுப்பினருமான செல்வம் அடைக்கலநாதன் கருத்து வெளியிட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்