புலிகள் போன்றதொரு கட்டமைக்கப்பட்ட இராணுவம் மீண்டும் உருவாகாது – அநுரகுமார

விடுதலை புலிகள் அமைப்பு போன்றதொரு கட்டமைக்கப்பட்ட இராணுவம் மீண்டும் உருவாகாதென தேசிய மக்கள் சக்தியின் ஜனாதிபதி வேட்பாளர் அநுரகுமார திசாநாயக்க தெரிவித்தார்.

தலவத்துகொடவில் நேற்று (சனிக்கிழமை) நடைபெற்ற சட்டத்தரணிகளுடனான சந்திப்பொன்றில் கலந்துகொண்டு கருத்துரைக்கும்போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.

அவர் அங்கு மேலும் தெரிவிக்கையில், தற்போது நாட்டிலிருக்கும் சட்டம் சாதாரண மக்கள் மீது மாத்திரமே பாய்வதாகவும் இதுவரை இருந்த ஆட்சியாளர்கள் சகலரும் சட்டத்தை மீறியே செயற்பட்டுள்ளதாகவும் குற்றஞ்சாட்டினார்.

தேசிய பாதுகாப்பு தொடர்பாக அதிகளவில் பேசப்பட்டாலும் நாட்டில் காணப்படும் பாதுகாப்பற்ற தன்மையை கருத்திற்கொண்டுதான் பாதுகாப்பு கட்டமைப்பும் உருவாக்கப்பட வேண்டுமெனவும் தெரிவித்தார்.

மேலும் யுத்தம் நடந்த காலப்பகுதியில் தமிழீழ விடுதலை புலிகள் அமைப்பானது, தமக்கான சுயஆட்சிகொண்ட பிரதேச, தரைப்படை, விமானப்படை, கடற்படை என்பவற்றுடன் இலங்கை இராணுவத்தை எதிர்கொள்ள கூடிய வகையிலான இராணுவ கட்டமைப்பாக உருவெடுத்திருந்ததெனவும் தெரிவித்தார்.

மேற்படி அமைப்பொன்று மீண்டும் இலங்கையில் உருவாகுவதற்கான எந்தவொரு சாத்தியமும் இல்லை எனவும் வடக்கில் ​தொடர்ச்சியாக யுத்தம் இருக்கும் என்றும் வடக்கிலுள்ள தாய்மார்கள் யுத்தத்துக்காகவே தமது பிள்ளைகளை ஆளாக்குகிறார்கள் என்றும் தவறானதொரு எண்ணக்கரு தெற்கிலுள்ள மக்கள் மத்தியில் பரப்பப்படுவதாகவம் சாடியுள்ளார்.

அத்துடன் யுத்தத்தால் வடக்குக்கே அதிக பாதிப்பு ஏற்பட்டதால் தெற்கில் யுத்தம் ஒன்று ஏற்பட வேண்டும் என்று கருதும் அளவுக்குகூட வடக்கில் உள்ள மக்கள் யுத்தம் ஏற்படுவதை விரும்பவில்லை எனவும் எந்த இனத்துக்குள்ளும் இனவாத குழுக்கள் உருவாகும் சூழலை இல்லாது செய்வோம் என்றும் தேசிய மக்கள் சக்தியின் ஜனாதிபதி வேட்பாளர் அநுர குமார திஸாநாயக்க குறிப்பிட்டார்.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்