கஜேந்திரகுமார் அணியின் வில்லங்க நிபந்தனைகளினால் பொது இணக்கப்பாடு முயற்சி படுதோல்வி

ஆறு தமிழ் கட்சிகளை இணைத்து ஜனாதிபதித் தேர்தலில் பொது இணக்கப்பாட்டை ஏற்படுத்தும் யாழ். பல்கலைகழக மாணவர்களின் முயற்சி இன்று பின்னடைவைச் சந்தித்தது.

கட்சிகள் முன்வைத்த ஆவணத்தின் அடிப்படையில், பல்கலைக்கழக மாணவர்களால் இறுதி ஆவணமொன்று தயாரிக்கப்பட்டிருந்தது. அந்த ஆவணத்தை பிரதான வேட்பாளர்கள் இருவரிடமும் சமர்ப்பித்து, அதற்கு சம்மதம் தெரிவிப்பவருக்கே ஆதரவளிக்க வேண்டுமென பல்கலைகழக மாணவர்கள் குறிப்பிட்டனர்.

ஆனால், அந்த வரைபின் உள்ளடக்கத்தில் கட்சிகளுக்கிடையில் இணக்கப்பாடு எட்டப்படவில்லை.

தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் விடாப்பிடியாக பல்வேறு குழப்பமான நிபந்தனைகளை விதித்ததால் இன்றைய சந்திப்பு குழப்பமடைந்தது. அந்தக் கட்சி மற்றக் கட்சிகளைச் சங்கடப்படுத்தும் சாத்தியமில்லாத நிபந்தனைகளை விதித்ததால் அங்கு குழப்பம் ஏற்பட்டது.

அந்த வரைபை பிரதான வேட்பாளர்கள் ஏற்காவிட்டால் தேர்தலைப் புறக்கணிப்பது என்ற விடயம் உள்ளடக்கப்பட வேண்டும் என்று தமிழ்த் தேசிய மக்கள் முன்னணி குறிப்பிட்டது. எனினும், அதற்கு மற்றக்  கட்சிகள் உடன்படவில்லை. இதனால் ஆக்ரோசமான வாதப்பிரதிவாதங்கள் நடந்தன.

இந்த வரைபை பொது வேட்பாளர்கள் ஏற்காத பட்சத்தில், அடுத்தது என்ன செய்வதென்பதையும் ஆலோசிக்க வேண்டுமென முன்னணி விடாப்பிடியாக நின்றது.

புதிய அரசமைப்பு தொடர்பில் நாடாளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்ட இடைக்கால வரைபை நிராகரிப்பதாக ஆவணத்தில் குறிப்பிடப்பட வேண்டுமென முன்னணி அடுத்த வில்லங்கத்தைக் கிளப்பியது. எனினும், தமிழரசுக் கட்சி, புளொட் அதற்கு சம்மதிக்கவில்லை. இதனால் இன்றைய சந்திப்பு வெற்றியளிக்கவில்லை.

நாளைய தினம் மீண்டும் கூடி ஆவணத்தில் கையொப்பமிடலாம் என ஏற்பாட்டாளர்கள் தெரிவித்தனர்.

இன்றைய கருத்தின் அடிப்படையில், ஆவணத்தில் திருத்தம் செய்வதாக ஏற்பாட்டாளர்கள் தெரிவித்தனர். எனினும், இடைக்கால அறிக்கையை நிராகரிப்பதாக அதில் குறிப்பிடப்பட்டிருந்தால், அதில் கையொப்பமிடமாட்டோம் என தமிழரசுக் கட்சி, புளொட் அழுத்தம் திருத்தமாகத் தெரிவித்தன.

ஜனாதிபதித் தேர்தலைப் பகிஷ்கரிப்பதாக பகிரங்க அறிவித்தல் விடுத்த நிலையில், முன்னணியை இந்தக்  கலந்துரையாடலில் இணைத்தமை தவறானது என்று அதில் பங்குபற்றிய உறுப்பினர்கள் பலர் சந்திப்பின் பின்னர் குறிபிட்டனர். “அவர்கள் தமது நிலைப்பாட்டை மீளப்பெற்ற பின்னர் சந்திப்பில் கலந்துகொண்டிருந்தாலே வெளிப்படையான சந்திப்பாக இருந்திருக்கும். தற்போது ஜனாதிபதித் தேர்தல் பகிஷ்கரிப்பை நோக்கி மற்றக்கட்சிகளைத் தள்ள அல்லது இந்த முயற்சியைக் குழப்ப முன்னணி முயற்சிக்கின்றது” என அவர்கள் குறிப்பிட்டனர்.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்