ஒரு மாதத்திற்கு பின்னர் பணிக்கு திரும்பும் பல்கலை கல்விசாரா ஊழியர்கள்

அனைத்துப் பல்கலைக்கழகங்களின் கல்வி நடவடிக்கைகள் இன்று (திங்கட்கிழமை) முதல் வழமை போன்று இடம்பெறவுள்ளன.

பல்கலைக்கழக துணைவேந்தர்கள் இதற்குத் தேவையான திட்டத்தைத் தயார் செய்துள்ளதாக பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழுவின் துணைத் தலைவர் பேராசிரியர் ஏ.எஸ்.எம்.குணரத்ன தெரிவித்துள்ளார்.

பல்கலைக்கழக கல்விசாரா ஊழியர்களின் பணிப்புறக்கணிப்பு காரணமாக ஒரு மாத காலம் பல்கலைக்கழக கல்வி நடவடிக்கைகள் தடைப்பட்டிருந்தன.

கல்விசாரா ஊழியர்களின் பணிப்புறக்கணிப்பு ஆரம்பிக்கப்பட்டபோது பல்கலைக்கழகங்களுக்கு புதிய மாணவர்களை உள்வாங்கும் முதல் சுற்றுத் தெரிவு பூர்த்திசெய்யப்பட்டு வெற்றிடங்களைப் பூர்த்தி செய்யும் பணி ஆரம்பிக்கப்பட்டிருந்ததாக பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழுவின் துணைத் தலைவர் பேராசிரியர் ஏ.எஸ்.எம்.குணரத்ன தெரிவித்துள்ளார்.

இந்நிலையில், கடந்த வருடத்தில் கல்விப் பொதுத்தராதர உயர்தரப் பரீட்சைப் பெறுபேறுகளுக்கு அமைய பல்கலைக்கழகங்களுக்கு புதிய மாணவர்களை உள்வாங்கும் பணி இன்று முதல் ஆரம்பமாவதாகவும் அவர் கூறியுள்ளார்.

மருத்துவ மற்றும் பொறியியல்பீட மாணவர்களின் கல்வி நடவடிக்கைகள் அடுத்த மாதத்தில் ஆரம்பிக்கக்கூடியதாக இருக்கும் என்றும் அவர் நம்பிக்கை வெளியிட்டுள்ளார்.

சம்பளம் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை முன்வைத்து கடந்த ஒரு மாத காலமாக பல்கலைக்கழக கல்விசாரா ஊழியர்கள் பணிப்புறக்கணிப்பில் ஈடுபட்டு வந்தனர்.

இதனையடுத்து நேற்று முன்தினம் உயர்கல்வி அமைச்சின் செயலாளருடன் இடம்பெற்ற பேச்சுவார்த்தையை அடுத்து அவர்கள் பணிப்புறக்கணிப்பு போராட்டத்தை கைவிட தீர்மானித்தமை குறிப்பிடத்தக்கது.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்