தமிழ் கட்சிகளின் ஒருமித்த முடிவு – இறுதிசுற்று பேச்சு இன்று

வடக்கு கிழக்கு பல்கலைக்கழக பிரதிநிதிகளுக்கும் தமிழ் கட்சிகளின் பிரதிநிதிகளுக்கும் இடையிலான ஐந்தாம் சுற்று சந்திப்பு யாழில் இடம்பெறவுள்ளது.

நேற்று இடம்பெற்ற நான்காம் சுற்று சந்திப்பில் இணக்கமேதும் எட்டப்படாமல் முடிவடைந்தது.

இந்நிலையில், பொது உடன்படிக்கையில் கட்சிகள் எவையும் ஒப்பமிடாத நிலையில் இன்று (திங்கட்கிழமை) பகல் 1.30 மணிக்கு மீண்டும் சந்திப்பு இடம்பெறவுள்ளது.

இதன்போது ஜனாதிபதி தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்களிடமும் சர்வதேச சமூகத்திடமும் தமிழர்கள் சார்பில் முன்வைக்கப்பட வேண்டிய சரத்துக்கள் அடங்கிய பொது உடன்படிக்கையில் கட்சிகள் முன்வைத்த திருத்தங்களுடன் ஒப்பமிடுவதற்கு கலந்துகொண்ட கட்சிப் பிரமுகர்களிடையே இணக்கம் எட்டப்பட்டதாக தெரிவிக்கப்படுகிறது.

எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலில் தமிழ் தேசியக் கட்சிகளை பொதுநிலைப்பாடு ஒன்றுக்கு வரச்செய்வதற்கான முயற்சியில் வடக்கு – கிழக்கு பல்கலைக் கழக மாணவர் ஒன்றியம் ஈடுபட்டுள்ளது.

இதன்படி வடக்கு கிழக்கு பல்கலைக்கழக பிரதிநிதிகளுக்கும் தமிழ் கட்சிகளின் பிரதிநிதிகளுக்கும் இடையில் இதுவரையில் நான்கு தடவைகள் சந்திப்புகள் இடம்பெற்றுள்ன.

இந்தச் சந்திப்புகளில் யாழ்ப்பாணம் மற்றும் கிழக்கு பல்கலைக்கழக மாணவர் ஒன்றியப் பிரதிநிதிகளுடன் இலங்கை தமிழ் அரசுக் கட்சியின் சார்பில் அதன் தலைவரும் நாடாளுமன்ற உறுப்பினருமான மாவை.சோ.சேனாதிராஜா, நாடாளுமன்ற உறுப்பினரும் ஊடகப் பேச்சாளருமான எம்.ஏ.சுமந்திரன் ஆகியோர் பங்குபற்றினர்.

அத்துடன் புளொட் சார்பில் அதன் தலைவரும் நாடாளுமன்ற உறுப்பினருமான த.சித்தார்ந்தன், முன்னாள் வடக்கு மாகாண சபை உறுப்பினர் பா.கஜதீபன் ஆகியோரும் தமிழ் தேசிய மக்கள் முன்னணி சார்பில் அதன் தலைவர் பொ.கஜேந்திரகுமார், செயலாளர் செ.கஜேந்திரன், சட்டத்தரணி சுகாஸ் கனகரட்ணம் ஆகியோரும் கலந்துகொண்டனர்.

மேலும் ஈ.பீ.ஆர்.எல்.எப் சார்பில் நாடாளுமன்ற உறுப்பினர் சிவசக்தி ஆனந்தன், அதன் தலைவர் சுரேஸ் பிரேமச்சந்திரன் ஆகியோரும் தமிழ் மக்கள் கூட்டணி சார்பில் க.அருந்தவபாலனும் கலந்துகொண்டனர்.

மேலும் பொது அமைப்புகளின் பிரதிநிதிகள், சின்மய மிஷன் வதிவிட சுவாமிகள், யாழ்.பல்கலைக்கழக அரசறிவியல் துறை சிரேஷ்ட விரிவுரையாளர் பேராசிரியர் எஸ்.கணேசலிங்கம், அரசியல் ஆய்வாளர் எஸ்.ஜோதிலிங்கம் ஆகியோரும் இந்த சந்திப்புகளில் கலந்துகொண்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்