தாக்குதல் குறித்து ஆராயும் ஆணைக்குழு – முறைப்பாடுகளை பெறும் நடவடிக்கை நிறைவு

ஈஸ்டர் தாக்குதல் தொடர்பாக விசாரணை மேற்கொள்ளும் ஜனாதிபதி ஆணைக்குழுவினால் முறைப்பாடுகளை பெற்றுக்கொள்ளும் நடவடிக்கை நிறைவடையவுள்ளது.

அதற்கமைய குறித்த நடவடிக்கைகள் இன்றுடன் (திங்கட்கிழமை) நிறைவடையவுள்ளதாக அந்த ஆணைக்குழு குறிப்பிட்டுள்ளது.

மேன்முறையீட்டு நீதிமன்ற நீதியரசர் ஜகத் டி சில்வாவின் தலைமையிலான ஐந்து பேர் கொண்ட ஆணைக்குழு ஈஸ்டர் தாக்குதல்கள் குறித்து ஆராய்வதற்காக நியமிக்கப்பட்டது.

பயங்கரவாத தாக்குதல் தொடர்பாக விசாரணைகளை மேற்கொண்டு அதற்குரிய நடவடிக்கைகள் குறித்து ஆராய்வதற்காக இந்த குழு நியமிக்கப்பட்டது.

இந்த குழுவில் பொது மக்களும் தகவல்களை வழங்குவதற்கு ஏற்பாடுகள் செய்யப்பட்டன.

அதற்கமைய கொழும்பு -7, முதலாம் மாடி, இலக்கம்-5, பண்டாரநாயக்க சர்வதேச ஞாபகார்த்த மாநாட்டு மண்டபம் என்ற முகவரிக்கு பதிவு தபால் ஊடாக தங்களது வாக்குமூலங்களை பொதுமக்கள் அனுப்பி வைக்கமுடியுமென ஆணைக்குழு தெரிவித்திருந்தது.

இவ்வாறு பொதுமக்களினால் வழங்கப்படும் தகவல்களை மதிப்பீடு செய்து, தொடர் குண்டுத் தாக்குதல் விவகாரத்தில் மேலதிக நடவடிக்கைகளை மேற்கொள்ளவுள்ளதாக ஆணைக்குழு தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்