மீண்டும் தேர்தலில் களமிறங்கப்போவதாக கிழக்கு மாகாண முன்னாள் முதலமைச்சர் அறிவிப்பு

மக்களுக்கு வழங்கியுள்ள வாக்குறுதிகள் அனைத்தையும் முழுமையாக நிறைவேற்றவே எதிர்வரும் நாடாளுமன்றப் பொதுத்தேர்தலில் மீண்டும் களமிறங்கவுள்ளேன் என கிழக்கு மாகாண முன்னாள் முதலமைச்சர் நஸீர் அஹமட் தெரிவித்துள்ளார்.

நாட்டில் அடுத்து நடைபெறவுள்ள தேர்தல்கள் தொடர்பாக கருத்து தெரிவிக்கும்போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார். நஸீர் அஹமட் மேலும் கூறியுள்ளதாவது, “எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தல் முடிவடைந்ததும்  நாடாளுமன்றம் கலைக்கப்படுகின்ற சாத்தியம் இப்போதே வெளிப்பட்டு விட்டது.

எனவே இவ்வருடம் நவம்பர் 17 தொடக்கம் அடுத்த வருடம் பெப்ரவரி 8ஆம் திகதிக்கு இடையில் எந்த நேரத்திலும் நாடாளுமன்றம் கலையலாம்.

முதலமைச்சராக பதவி வகித்த கால கட்டத்தில் கிழக்கு மாகாணத்திலுள்ள தமிழ், முஸ்லிம், சிங்கள மக்களுக்காக மத்திய அரசுகளின் பங்களிப்புடனும் பல்வேறு சமூக நலத் திட்டங்களைத் ஆரம்பித்து வைத்தேன்.

அவற்றில் பல திட்டங்களை மாகாண சபையின் இறுதி ஆளுகைக் காலம் வரை என்னால் நிறைவேற்றி மக்களிடம் கையளிக்க முடிந்தது.

அதேவேளை இன்னும் பல பொருளாதார, வாழ்வாதார, பொதுநலத் திட்டங்கள் நிறைவு பெறுவதற்கிடையில் மாகாண சபை கலைக்கப்பட்டதால் அவை மக்களிடம் கையளிக்க முடியாமல் போய் விட்டது.

எனவே, எனது வாக்குறுதியை நிறைவேற்றி வைக்க வேண்டும் என்ற மக்கள் சார்பான கனவு என்னுள் தொடர்ந்து இருப்பதால் அவற்றை நிறைவேற்றியே தீருவேன்.

அதற்காக அடுத்து வரப்போகின்ற நாடாளுமன்றப் பொதுத் தேர்தலில் களமிறங்கவுள்ளேன்” என குறிப்பிட்டுள்ளார்.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்