தோல்வியுற்ற அரசியலை முடிவுக்குக் கொண்டு வருவோம் : மக்கள் சக்தி இயக்கம் அறைகூவல்!

திறமையற்ற அரசியல் துயரத்தை முடிவுக்குக் கொண்டு வருமாறு நாட்டு மக்களுக்கு  மக்கள் சக்தி இயக்கம் பகிரங்க அறைகூவல் விடுத்துள்ளது.

மட்டக்களப்பில் இன்று (திங்கட்கிழமை) வெளியிட்டுள்ள துண்டுப்பிரசுரத்திலேயே மேற்படி அறைகூவல் விடுக்கப்பட்டுள்ளது.

குறித்த துண்டுப்பிரசுரத்தில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது, “இந்த நாட்டில் வாழும் மக்களுக்கு நல்லதோர் தேசத்தையும் மக்களையும் கட்டி எழுப்ப வேண்டும். அதற்கு உண்மையான, முற்போக்கான, இடதுசாரி சக்திகளுடன் நாட்டு மக்கள் கைகோர்க்க வேண்டும்.

ஒற்றுமை சகோதரத்துவம் என்பனவற்றுடன் இணைந்து உலகளாவிய வல்லரசுகளின் பொறியில் விழாது இந்நாட்டைப் பாதுகாக்க வேண்டும்.

இந்த நாட்டில் வாழும் அனைத்து மக்களின் பாதுகாப்பையும் உறுதிப்படுத்துகின்ற அதேவேளை தேசிய பாதுகாப்பு எனும் போர்வையில் கொண்டு வரப்படுகின்ற அனைத்து அடக்குமுறைச் சட்டங்களையும் நிராகரிக்க வேண்டும்.

எந்தவொரு அரசியல் தலையீடும் இல்லாமல் சட்டம் சுயாதீனமாக்கப்பட வேண்டும் என்பதே எமது குறிக்கோளாகும். அதன் மூலம் அனைவருக்குமான நீதி நியாயத்தை உறுதிப்படுத்த முடியும்.

மக்களின் சுதந்திரத்தையும் அனைத்து விதமான மனித உரிமைகளையும் பாதுகாப்பதோடு அனைத்து குடிமக்களையும் சரிசமமாக மதிக்க வேண்டும்.

அதேவேளை எந்தவொரு சமூகத்தையும் ஒடுக்குமுறைக்கு உள்ளாக்குவதை தடுத்து ஒரு புதிய ஜனநாயக முற்போக்கு மக்கள் நல ஆட்சியை உருவாக்குவதற்கு ஒன்றிணைந்து செயற்பட வேண்டும் என்பது எங்கள் நோக்கமாகும்” எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்