தேர்தல் விஞ்ஞாபனத்தில் தமிழர்களின் பிரச்சினைக்கு முக்கியத்துவம் அளிக்கப்படும் – மஹிந்த

தமிழ் மக்களின் அரசியல் பிரச்சினைக்கு தீர்வு காண தயாராக இருப்பதாக எதிர்க்கட்சித் தலைவர் மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்தார்.

அத்தோடு தமது தேர்தல் விஞ்ஞாபனத்தில் இந்த விடயத்துக்கு முக்கியத்துவம் அளிக்கப்படும் என்றும் தேர்தல் விஞ்ஞாபனம் வெளியிடப்பட்ட பின்னர் இந்த விடயம் தொடர்பாக தமிழ் தேசியக் கூட்டமைப்புடன் பேச்சுவார்த்தையொன்று இடம்பெறுமெனவும் அவர் குறிப்பிட்டார்.

தமிழ் தேசிய பத்திரிகைகளின் ஆசிரியர்களை தனது உத்தியோகபூர்வ இல்லத்தில் சந்தித்து கலந்துரையாடியபோதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.

இங்கு அவர் மேலும் கருத்து தெரிவிக்கையில், “தமிழ் மக்களின் அரசியல் பிரச்சினைகளுக்கு தீர்வைக் காண நாம் நடவடிக்கை எடுப்போம்.

இவ்விடயம் தொடர்பாக எமது தேர்தல் விஞ்ஞாபனத்தில் முக்கியத்துவம் அளிக்கப்படும். நாட்டில் அரசியல் பிரச்சினையை தவிர ஏனைய பிரச்சினைகள் சகல மக்களுக்கும் பொதுவானதாகவே காணப்படுகின்றன.

விவசாயிகளின் பிரச்சினை, பட்டதாரிகளின் பிரச்சினை என அனைத்து பிரச்சினைகளும் அனைவருக்கும் பொதுவாகவே உள்ளன.

ஆனால் அரசியல் பிரச்சினை என்பது தமிழ் மக்கள் மத்தியில் காணப்படுகின்றது. அதற்கு நாம் தீர்வு வழங்க வேண்டும். அதற்கான யோசனை நிச்சயம் தேர்தல் விஞ்ஞாபனத்தில் இடம்பெறும்.

தமிழ் தேசிய கூட்டமைப்புடன் இன்னமும் பேச்சுவார்த்தை நடத்தவில்லை. நாம் எமது கொள்கைத் திட்டங்களை வெளியிட்ட பின்னரே அவர்களுடன் பேசுவதற்கு எண்ணியுள்ளோம். 18ஆம் திகதி தேர்தல் விஞ்ஞாபனம் வெளியிடப்படும். அதன் பின்னர் அவர்களுடன் பேச்சுவார்த்தை நடத்துவேன்.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்