கோட்டாபய பெருந்தோட்ட மக்களின் சம்பள பிரச்சினைக்கு தீர்வை வழங்குவார்- கிசான்

பொதுஜன பெரமுனவின் ஜனாதிபதி வேட்பாளர் கோட்டாபய ராஜபக்ஷ வெற்றிபெற்றால் பெருந்தோட்ட மக்களின் சம்பள பிரச்சினைக்கு உரிய தீர்வை வழங்குவாரென அருனலு மக்கள் முன்னணியின் தலைவர் கே.ஆர்.கிசான் தெரிவித்துள்ளார்.

நுவரெலியா- டிக்கோயாவில் நேற்று (ஞாயிற்றுக்கிழமை) நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும்போதே அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார். கே.ஆர் கிசான் மேலும் கூறியுள்ளதாவது, “மலையக தோட்டத் தொழிலாளர்களுக்கு 50 ரூபாயினை கூட பெற்றுக்கொடுக்க முடியாத ஐக்கிய தேசிய கட்சி, சஜித் ஆட்சிக்கு வந்தால் 50 ரூபாய் சம்பள உயர்வினை பெற்றுத்தருவதாக தெரிவிக்கிறது.

இவர்கள் காலம் காலமாக மலையக மக்களின் வாக்குகளை பெற்றுக்கொண்டு அவர்களை ஏமாற்றியே வந்துள்ளனர். இந்த நல்லாட்சி அரசாங்கத்தினை தெரிவு செய்வதற்கு மலையக மக்கள் பாரிய அளவில் பங்களிப்பு செய்தார்கள்.

ஆனால், அவர்களின் அடிப்படை பிரச்சினையை தீர்ப்பதற்கு இதுவரையும் இந்த அரசாங்கம் நடவடிக்கை மேற்கொள்ளவில்லை.

நல்லாட்சி அரசாங்கத்தில் வடக்கினை எடுத்துக்கொண்டாலும் சரி மலையகத்தினை எடுத்துக்கொண்டாலும் சரி எவ்வித அபிவிருத்தியும் செய்யப்படவில்லை.

மாறாக பல தோட்டங்கள் துண்டாடப்பட்டு தோட்டத்தொழிலாளர்களை முதலாளியாக்குவோம் என தெரிவித்து அவர்களை மேலும் இன்னல்களுக்கு கொண்டுச் சென்றுள்ள வரலாறுகள்தான் அதிகம் உள்ளன.

இதற்கு சிறந்த உதாரணமாக நுவரெலியா மாவட்டத்திலுள்ள மாவுவா தோட்டத்தை கூறலாம். இன்று அவர்களுக்கு தோட்டத்தொழிலாளர்களுக்கு கிடைக்கும் ஊழியர் சேமலாப நிதியினைக்கூட பெறமுடியாத நிலையில் உள்ளனர்.

நுவரெலியா மாவட்டத்தில் உயர்தரம் மற்றும் சாதாரண தரம் படித்த 23ஆயிரம் பேரும் பட்டதாரிகள் 300பேரும் வேலையின்றி உள்ளனர்.

இவர்கள் எவருக்கும் வேலைவாய்ப்பினை பெற்றுக்கொடுப்பதற்கு இந்த அரசாங்கம் எவ்வித நடவடிக்கையும் எடுக்கவில்லை.

நான் ஜெனிவா சென்று தோட்டத்தொழிலாளர்களுக்கு மாதச்சம்பளம் வழங்க வேண்டுமென வலியுறுத்தினேன். தோட்டத்தொழிலாளர்களின் அடிப்படைச் சம்பளம் இல்லாமல் தொழிலாளர் சேமலாப நிதியம், தொழிலாளர் நலன்புரி நிதியம் ஆகியனவற்றை அறவிட முடியாதென சுட்டிக்காட்டினேன். அவர்களும் அதனை ஏற்றுக்கொண்டார்கள்.

இதனை தற்போதுள்ள பிரதமர், ஜனாதிபதி ஆகியவர்களுக்கு தெரிவித்தும் அவர்கள் எவ்வித நடவடிக்கையும் எடுக்கவில்லை.

ஆனால் 52 நாட்கள் அரசாங்கத்தில் மஹிந்த ராஜபக்ஷ பிரதமராகியபோது அவர் தோட்டத்தொழிலாளர்களுக்கு 1000 ரூபாய் சம்பள உயர்வு வழங்க வேண்டுமென வலியுறுத்தினார்.

இந்நிலையில்தான் நாங்கள் ஒரு சில நிபந்தனைகளுடன் கோட்டாபய ராஜபக்ஷவுக்கு ஆதரவளிக்க தீர்மானித்துள்ளோம்.

அவர் வெற்றிபெற்றால் தோட்டத்தொழிலாளர்களுக்கு மாதச்சம்பளம் அல்லது 1000 ரூபாய் சம்பளம் பெற்றுத்தருமாறும் அத்தோடு அரச உத்தியோகத்தர்களுக்கும் தோட்டத்தொழிலாளர்களுக்கும் காணியுரிமை பெற்றுக்கொடுக்க வீட்டுரிமை, மலையக இளைஞர்களது தொழில்வாய்ப்பு, தோட்ட சுகாதார மேம்படுத்தல் போன்ற பல கோரிக்கைகளை எழுத்து மூலம் தருவதற்கு இணக்கம் தெரிவித்ததைஅடுத்தே நாங்கள் அவருக்கு ஆதரவளிக்க முன்வந்துள்ளோம்.

எனவே  கோட்டாவுக்கு ஆதரவளித்து அவரை வெற்றிபெறச் செய்வோம்” என குறிப்பிட்டுள்ளார்.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்