நிறைவுக்கு வருகின்றது விசாரணை!

2008 ஆம் ஆண்டு 11 தமிழ் இளைஞர்கள் கடத்தப்பட்டு காணாமல் ஆக்கப்பட்ட சம்பவம் தொடர்பாக நீதவான் நீதிமன்றத்தில் இடம்பெற்றுவரும் வழக்கு விசாரணைகள் அடுத்த வாரமளவில் முடிவுக்கு வர உள்ளது.

அத்தோடு குறித்த வழக்கு மேல் நீதிமன்றத்திற்கு மாற்றப்பட வாய்ப்புள்ளது என்பதுடன் குற்றப்பத்திரிக்கை தாக்கல் செய்யவும் நடவடிக்கை எடுக்கப்படவுள்ளது.

இந்நிலையில் குறித்த வழக்கை மேல் நீதிமன்றத்திற்கு மாற்றுவதற்கும், சட்டமா அதிபர் திணைக்களத்தால் குற்றச்சாட்டுகளைத் தாக்கல் செய்வதற்கும் முன்னர் விசாரணைகள் முழுமையாக முடிக்கவேண்டும் என பாதிக்கப்பட்ட தரப்பு சார்பாக கடுமையாக வலியுறுத்தப்பட்டுள்ளது.

இந்த விடயம் தொடர்பாக கருத்து தெரிவித்த சட்டத்தரணி அச்சலா செனவிரத்ன, “விசாரணை முழுமையாக முடிக்கப்படவில்லை என்று 11 இளைஞர்களின் பெற்றோர் உணர்கிறார்கள். இந்த வழக்கு 10 ஆண்டுகளாக நடந்து வருகிறது, இந்த நேரத்தில் குற்றச்சாட்டுகளை தாக்கல் செய்வதில் என்ன அவசரம்?.

இலங்கை முன்னாள் கடற்படைத் தளபதி அட்மிரல் வசந்த கரன்னாகொட வழங்கிய சாட்சியங்களில் கூடுதல் விவரங்கள் வெளிவந்திருந்தால், பொலிஸ் குற்றப் புலனாய்வுத் துறை வழக்கை முடிக்க முயற்சிக்காமல் மேலதிக விசாரணைகளை மேற்கொள்ள வேண்டும்” என கூறினார்.

2008 – 2009 ஆம் ஆண்டில் 11 இளைஞர்கள் கடத்தப்பட்டு காணாமற்போனமை குறித்து சி.ஐ.டி. அண்மையில் முன்னாள் கடற்படைத் தளபதி அட்மிரல் வசந்த கரன்னாகொடவிமிருந்து புதிய சாட்சியங்களை பதிவு செய்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்