இனவாத கூட்டணியின் கூலிப்படையாக ஹிஸ்புல்லா இயங்குகிறார்- ரவூப் ஹக்கீம் குற்றச்சாட்டு

இனவாத பிரச்சினைகள் நடந்தபோது ஹிஸ்புல்லா மௌனமாக இருந்தார். தற்போது இனவாத கூட்டணியின் கூலிப்படையாக இயங்குகிறாரென அமைச்சர் ரவூப் ஹக்கீம் தெரிவித்துள்ளார்.

ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் மட்டக்களப்பு மாவட்ட மத்திய குழுக் கூட்டம் நேற்று (ஞாயிற்றுக்கிழமை) காத்தான்குடியில் நடைபெற்றது.

அதில் கலந்துகொண்டு உரையாற்றும்போதே அமைச்சர் இவ்வாறு தெரிவித்தார். அவர் மேலும் கூறியுள்ளதாவது, “ஜனாதிபதி தேர்தலில் காத்தான்குடி முக்கியமானதொரு பேசுபொருளாக இருக்கப்போகின்றது.

கடந்த ஏப்ரல் 21 ஆம் திகதி  தாக்குதலின் பின்னர் முழுநாடும், ஏன் சர்வதேசமும் அவதானம் செலுத்தும் இடமாக காத்தான்குடி மாறியிருக்கிறது.

இந்த நெருக்கடிகளிலிருந்து விடுபடுவதற்கு மக்கள் முயற்சித்துக்கொண்டிருக்கும் நிலையில், முழு சமூகத்தையும் நெருக்கடிக்குள் தள்ளிவிடும் வேலையை இங்குள்ள அரசியல் பிரமுகர் செய்துகொண்டிருக்கிறார்.

கடந்த ஏப்ரல் 21 தாக்குதலின் பின்னர், சமூகத்தின் மீதான நெருக்குவாரங்களை கவனத்திற்கொண்டு முஸ்லிம் அமைச்சர்கள் பதவிகளைத் துறந்து பலமானதொரு செய்தியை நாட்டுக்கும் சர்வதேசத்துக்கும் சொன்னோம்.

அரசியல் வேறுபாடுகளை மறந்து சமூகம் ஒற்றுமைப்பட வேண்டும் என்ற சூழலில் தன்னையும் தனது சுயநலத்தையும் பாதுகாத்துக் கொள்வதற்கு முழு சமூகத்தையும் அடகுவைக்கின்ற வங்குரோத்து அரசியல் மிகவும் ஆபத்தானது.

அவருடைய மட்டக்களப்பு தனியார் பல்கலைக்கழக விவகாரம் தொடர்பாக முஸ்லிம் தலைமைகள் மிகவும் பக்குவமாக நடந்துகொண்டன. அவரது பல்கலைக்கழக விவகாரத்துக்கும் வைத்தியர் ஷாபியின் விவகாரத்துக்கும் நாங்கள் வித்தியாசம் பார்க்கவில்லை. இரண்டையும் இனவாத பிரச்சினைகளாகவே நோக்கினோம்.

அவரையும் பாதிக்காமல் சமூகத்தையும் பாதிக்கமால் இனவாதிகளுக்கு தீனியும்போடாமல் நாங்கள் மிக நேர்மையாகவும் பக்குவமாகவும் நடந்துகொண்டோம்.

முஸ்லிம்களின் வாக்குகளை பகல் கொள்ளையிட்டு எதிரணி வேட்பாளர்களின் காலடியில் கொண்டுபோய் கொட்டுவதை நாட்டிலுள்ள முஸ்லிம் மக்கள் அனுமதிக்கமாட்டார்கள்.

இனவாத நெருக்கடிக்குள் சிக்குண்டிருந்த ஹிஸ்புல்லாவுக்கு ஆறுதல் கொடுத்தோம். ஆனாலும், அவருடைய பக்குவமில்லாத செயற்பாடுகள், பிரச்சினைகளை மேலும் விஸ்வரூபமெடுக்க வைத்துள்ளது.

தாக்குதல் நடைபெற்ற பின்னர் ஹிஸ்புல்லா பள்ளிவாசல் ஒன்றுக்குள் வைத்து பக்குவமில்லாமல் பேசியதையும் அதனால் ஏற்பட்ட விபரீதங்களையும் எல்லோரும் அறிந்திருப்பீர்கள்.

கடந்த தேர்தலில் யாருடன் நின்றார். பின்னர் பின்கதவால் சென்று எப்படி தேசியப்பட்டியலை கொள்வனவு செய்தார் என்பதை நாங்கள் பார்த்தோம்.

அதன்பின்னர் நடந்தேறிய கூத்துக்களின் ஓர் அங்கமாக சர்ச்சைக்குரிய ஞானசார தேரரை விடுவிக்க வேண்டும் என்று பகிரங்கமாக கோரிக்கை விடுத்தார்.

நான் என்ன சொன்னாலும் காத்தான்குடி மக்கள் கேட்பார்கள் என்ற இறுமாப்பில் சந்தர்ப்பவாத அரசியல் செய்பவர்களை மக்கள் தற்போது அடையாளம் கண்டுள்ளனர். தனது எஜமானர்களின் கூலிப்படையாக இருந்துகொண்டு சமூகத்தை விலைபேசி விற்கின்ற பிற்போக்குத்தனமான அரசியல்வாதிகளை மக்கள் தூக்கிவீச வேண்டும்.

எனவே ஒரு வாக்கேணும் ஹிஸ்புல்லாவுக்கு வழங்குவது துரோகத்தனத்துக்கு துணைபோவதாகும்” என குறிப்பிட்டுள்ளார்.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்