ஜனாதிபதி தேர்தல்: சட்டவிரோதமாக போட்டியிடும் நாமல் ராஜபக்ஷ!

எதிர்வரும் ஜனாதிபதி தேர்தலில் ஜனாதிபதி வேட்பாளர், சட்டத்தரணி நாமல் ராஜபக்ஷ (மஹிந்த ராஜபக்ஷவின் மகன் அல்ல) சட்டவிரோதமாக போட்டியிடுவதாக குற்றம் சாட்டப்பட்டுள்ளது.

நவம்பர் 16 ஆம் திகதி இடம்பெறும் ஜனாதிபதி தேர்தலில் 35 வேட்பாளர்களில் ஒருவராக தேசிய ஒற்றுமை அமைப்பின் சார்பாக சட்டத்தரணி நாமல் ராஜபக்ஷ போட்டியிடுவதாக தேர்தல்கள் ஆணைக்குழு அறிவித்திருந்தது.

இந்நிலையில் இந்த விடயம் தொடர்பாக ஆங்கில ஊடகம் ஒன்றுக்கு கருத்து தெரிவித்துள்ள தேசிய ஒற்றுமை அமைப்பின் பொதுச் செயலாளர் லீனஸ் ஜெயதிலக, “நாமல் ராஜபக்ஷவுடன் எங்களுக்கு எந்த தொடர்பும் இல்லை. அவரை எங்கள் வேட்பாளராக நிறுத்த நாங்கள் ஒப்புக் கொள்ளவில்லை.

அத்தோடு வரவிருக்கும் ஜனாதிபதி தேர்தலில் தேசிய ஒற்றுமை அமைப்பு போட்டியிடவில்லை என்பதுடன் அவரை வேட்பாளராக பரிந்துரைப்பதாக கையொப்பமும் இடவில்லை, எனவே நாமல் ராஜபக்ஷ எனது கையொப்பத்தை போலியாக உருவாக்கியிருக்கலாம்” என குற்றம் சாட்டியுள்ளார்.

இந்நிலையில் குறித்த சம்பவம் தொடர்பாக தேசிய தேர்தல்கள் ஆணைக்குழுவின் ஆணையாளர் நாயகம் சமன் ஸ்ரீ ரத்நாயக்கவை தொடர்புகொண்டு கேட்டபோது அவர், தேசிய ஒற்றுமை அமைப்பு இந்த விடயம் தொடர்பாக சட்ட நடவடிக்கை எடுக்க வேண்டும் என கூறினார்.

அத்தோடு அந்த அமைப்பு இந்த விடயத்தை நீதித்துறை முன் எடுத்துச் செல்வதுதான் சிறந்தது என்றும் தெரிவித்துள்ளார்.

இருப்பினும் இந்த விடயம் தொடர்பாக ஜனாதிபதி வேட்பாளர், சட்டத்தரணி நாமல் ராஜபக்ஷ எந்த கருத்தையும் தெரிவிக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்