மீனவ சமூகத்தை சேர்ந்த ஒருவரும் தேர்தலில் களமிறங்க வேண்டும்- சப்ராஸ் மன்சூர்

மீனவர்களது பிரச்சினைகள் தீர்க்கப்பட வேண்டுமானால் அவர்களுக்கு குரல் கொடுக்கக்கூடிய ஒருவர், அந்த சமூகத்தில் இருந்தே எதிர்வரும் உள்ளூராட்சி மன்றத்தேர்தலில் போட்டியிட்டு, மாநகர சபை செல்ல வேண்டுமென தேசிய காங்கிரஸின் கல்முனை மாநகர சபை உறுப்பினர் சப்ராஸ் மன்சூர் தெரிவித்துள்ளார்.

22 நாட்களின் பின்னர் கரை திரும்பிய  மீனவர்களின் குடும்பங்களின் நலனுக்காக  ஒரு தொகை பணத்தை  நேற்று (ஞாயிற்றுக்கிழமை)  நேரில் சென்று வழங்கிய பின்னர்  ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கையில் மேற்கண்டவாறு அவர் குறிப்பிட்டார்.

அதில் சப்ராஸ் மன்சூர், மேலும் தெரிவித்துள்ளதாவது, “பாதிக்கப்பட்ட மீனவர்களுக்கு  நிதியுதவி வழங்கப்பட வேண்டும் என்று கடந்த கல்முனை மாநகர சபையின் 18ஆவது அமர்வின்போது கோரிக்கை ஒன்றை  முன்வைத்தேன்.

இந்நிலையில்  இதுவரை காலமும் அந்த  வேண்டுகோளிற்கு எதுவித பதிலும் இல்லாத நிலையில், எனது சொந்த நிதியில் இருந்து பாதிக்கப்பட்ட மீனவ குடும்பங்களுக்கான உதவியை வழங்கி உள்ளேன்.

மக்களாகிய எமக்கு உணவுத் தேவையை பூர்த்தி செய்வதற்காக தமது உயிரையும் பணயம் வைத்து நமக்கான சேவையை செய்பவர்கள்தான் மீனவர்கள்.

அவர்களது சமூக நிலையானது சமூகத்தால் ஒதுக்கப்பட்டதாகவே காணப்படுகின்றது. தேர்தல் காலங்களில் மட்டும்தான் அரசியல்வாதிகளுக்கு மீனவர்களாகிய இவர்கள் தென்படுகின்றனர்.

எனவே, மீனவர்களது பிரச்சினைகள் தீர்க்கப்பட வேண்டுமானால் அவர்களை சேர்ந்த ஒருவரே எதிர்வரும் உள்ளூராட்சி மன்றத்தேர்தலில் போட்டியிட்டு மாநகர சபை செல்ல வேண்டும்” என குறிப்பிட்டுள்ளார்.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்