கிளிநொச்சி துப்பாக்கிச்சூடு – அறிக்கை சமர்ப்பிக்குமாறு கோரிக்கை

கிளிநொச்சி – அறிவியல் நகரில் பொலிஸார் நடத்திய துப்பாக்கிச்சூட்டு சம்பவம் குறித்த முதற்கட்ட அறிக்கையை மதுவரி திணைக்களம் கோரியுள்ளது.

இது தொடர்பாக வடமத்திய மாகாண உதவி மதுவரி ஆணையாளர் மற்றும் மேலதிக மதுவரி ஆணையாளர் தலைமையிலான விசாரணைக்குழு ஒன்று நியமிக்கப்பட்டுள்ளது.

இதேவேளை, தங்களது அதிகாரிகள் பிழை செய்திருந்தால், அவர்களுக்கு எதிராக கடுமையான ஒழுக்காற்று நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் மதுவரித் திணைக்களம் தெரிவித்துள்ளது.

பாரிய போதைப்பொருள் கடத்தல் தொடர்பாக கிளிநொச்சி பொலிஸாருக்கும் மதுவரித் திணைக்களத்தினருக்கும் நேற்று முன்தினம் இரவு ஒரேநேரத்தில் தகவல் கிடைத்துள்ளது.

இதனையடுத்து  தொடர்பாடலற்ற தேடலை பொலிஸார் மேகொண்டுள்ளனர். அதேவேளை மதுவரித் திணைக்களத்தினரும் தேடுதலில் ஈடுபட்டனர்.

இதன்போது பொலிஸாரின் வாகனத்திற்கு முன்பாக, மதுவரித் திணைக்களத்தினால் வாடகைக்கு அமர்த்தப்பட்ட வாகனம் குறித்த போதைப்பொருள் தேடுதல் நடவடிக்கைக்காக வேகமாக பயணித்துள்ளது.

இந்நிலையில் குறித்த வாகனத்திலேயே போதைப்பொருள் கடத்தப்படுவதாக எண்ணிய பொலிஸார் அதனை நோக்கி துப்பாக்கி பிரயோகம் மேற்கொண்டுள்ளனர்.

சம்பவத்தில் மதுவரித் திணைக்கள அதிகாரி காயமடைந்து வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சைப் பெற்று வருகிறார்.

இதேவேளை மதுவரித் திணைக்களத்தின் வாகனத்தை பொலிஸார் மறித்ததாகவும் எனினும் அவர்கள் வாகனத்தை நிறுத்தாது சென்ற நிலையில், துப்பாக்கிப் பிரயோகம் நடத்தப்பட்டதாக தெரிவிக்கப்படுகின்றமையும் குறிப்பிடத்தக்கது.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்