தமிழ்க் கட்சிகளோடு பேச்சு நடத்தத் தயார்! – சஜித், கோட்டா தெரிவிப்பு

“ஜனாதிபதித் தேர்தலில் தமிழ் மக்களின் வாக்குகள் எமக்கு இன்றியமையாதவையாக அமைகின்றன. அவர்களை வழிநடத்தும் தமிழ்க் கட்சிகளுடன் பேசுவதற்கு நாம் எந்த நேரமும் தயாராக இருக்கின்றோம்.”

– இவ்வாறு ஐக்கிய தேசியக் கட்சி தலைமையிலான புதிய ஜனநாயக முன்னணியின் ஜனாதிபதி வேட்பாளர் சஜித் பிரேமதாஸவும், ஸ்ரீலங்கா பொதுஜன முன்னணியின் ஜனாதிபதி வேட்பாளர் கோட்டாபய ராஜபக்சவும் தெரிவித்துள்ளனர்.

ஜனாதிபதித் தேர்தலில் போட்டியிடும் பிரதான வேட்பாளர்களிடம் தமிழர் தரப்பின் கோரிக்கைகளைக் கூட்டாக முன்வைத்து பேரம் பேசுவதற்காக இலங்கைத் தமிழரசுக் கட்சி, ரெலோ, புளொட், ஈ.பி.ஆர்.எல்.எவ். மற்றும் தமிழ் மக்கள் கூட்டணி  ஆகிய 5 தமிழ்க் கட்சிகள் பொது இணக்கப்பாடு ஒப்பந்தத்தில் நேற்று கையெழுத்திட்டன.

இது தொடர்பில் சஜித் பிரேமதாஸ, கோட்டாபய ராஜபக்ச ஆகியோரிடம் சர்வதேச செய்திச் சேவையொன்றின் கொழும்பு செய்தியாளர் வினவியபோதே அவர்கள் மேற்கண்டவாறு கூறியுள்ளனர்.

அவர்கள் தெரிவித்துள்ளவற்றின் சாராம்சம் வருமாறு:-

“வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த – அதிக வேட்பாளர்கள் போட்டியிடும் இந்த ஜனாதிபதித் தேர்தலில் சிங்கள, தமிழ், முஸ்லிம் ஆகிய மூவின மக்களின் பேராதரவும் எமக்குத் தேவை. அதில் தமிழ் மக்களின் வாக்குகள் எமக்கு இன்றியமையாதவையாக அமைகின்றன. அவர்களை வழிநடத்தும் தமிழ்க் கட்சிகளுடன் பேசுவதற்கு நாம் எந்த நேரமும் தயாராக இருக்கின்றோம். அந்தக் கட்சிகள் முன்வைக்கும் பரிந்துரைகளை நாம் அலசி ஆராய்வோம். நாட்டின் நல்லிணக்கத்துக்குப் பாதிப்பு ஏற்படாத – மக்கள் நலன் சார்ந்த பரிந்துரைகளுக்கு நாம் முன்னுரிமை கொடுப்போம். அந்தப் பரிந்துரைகள் தொடர்பில் எமது நிலைப்பாட்டை தமிழ்க் கட்சிகளின் பிரதிநிதிகளிடம் தெரிவிப்போம். எமது கொள்கைத் திட்டங்களையும் அவர்களிடம் விரிவாகத் தெளிவுபடுத்துவோம்” – என்று குறிப்பிட்டுள்ளனர்.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்