பொது இணக்கப்பாடு ஆவணத்தில் உள்ளவை

ஜனாதிபதித் தேர்தலில் ஓரணியில் செயற்படுவதற்கு 5 தமிழ்க் கட்சிகள் கையெழுத்திட்ட பொது இணக்கப்பாடு ஆவணத்தில் உள்ளக்கப்பட்டுள்ள விடயங்கள் வருமாறு:-

* புதிதாக உருவாக்கப்படும் அரசமைப்பு ஒற்றையாட்சி முறைமையை நிராகரித்து தமிழ்த் தேசத்தை அங்கீகரித்து அதற்கு தனித்துவமான இறைமை உண்டு என்பதையும், தமிழ் மக்கள் சர்வதேச சட்டத்தின் கீழ் சுயநிர்ணய உரிமைக்கு உரித்துடையவர்கள் என்பதையும் அங்கீகரித்து சமஷ்டி ஆட்சி முறைமையின் கீழ் இலங்கையின் தமிழ்த் தேசிய இனப் பிரச்சினைக்குத் தீர்வு காணப்பட வேண்டும்.

* இறுதிப்போரில் இடம்பெற்ற போர்க்குற்றங்கள் மற்றும் மனித குலத்துக்கு எதிரான குற்றங்கள் மற்றும் இனப்படுகொலை என்பவற்றுக்கு முழுமையான பக்கச்சார்பற்ற சர்வதேச பொறிமுறைகளான சர்வதேச குற்றவியல் நீதிமன்றம் அல்லது சர்தேச தீர்ப்பாயம் ஊடாக விசாரணைகள் மேற்கொள்ளப்படல் வேண்டும்.

* பயங்கரவாத தடைச்சட்டம் நீக்கப்படல் வேண்டும்.

* தமிழ் அரசியல் கைதிகள் அனைவரும் நிபந்தனையின்றி விடுதலை செய்யப்பட வேண்டும்.

* வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்கள் விவகாரத்தில் சர்வதேச பொறிமுறைகளின் கீழ் பாதிக்கப்பட்டவர்களுக்கு நீதி வழங்கப்பட வேண்டும்.

* வடக்கு, கிழக்கு மாகாணங்களில் நிலைகொண்டிருக்கும் அரச படைகள் போருக்கு முன் தமிழ் மக்களின் பாவனையிலிருந்த தனியார் மற்றும் அரச காணிகளிலிருந்து வெளியேற்றப்பட்டு அந்தக் காணிகள்  அனைத்தும் உடனடியாக விடுவிக்கப்படுவதுடன் மீள்குடியேற்ற நடவடிக்கைகள் துரிதப்படுத்தப்படல் வேண்டும்.

* வடக்கு, கிழக்கு மாகாணங்களில் அரச ஆதரவுடன் இடம்பெற்றுக்கொண்டிருக்கும் சிங்கள மயமாக்கல், பௌத்த மயமாக்கல் மற்றும் சிங்களக் குடியேற்றங்கள் உடனடியாக  நிறுத்தப்படல் வேண்டும்.

* வடக்குக்கு மகாவலி நதியை திசை திருப்புவது என்ற போர்வையில் வடக்கு மாகாணத்தில் சிங்களக்  குடியேற்றங்களை ஏற்படுத்துவதற்கு மாத்திரமே திட்டமிட்டு செயற்படும் சபையாக மகாவலி அதிகார சபை இயங்குவதால் மகாவலி அதிகார சபையின் நியாயாதிக்கம் வடக்கில் இல்லாது ஒழிக்கப்பட வேண்டும்.

* கிழக்கு மாகாணத்தில் மகாவலி அபிவிருத்தித் திட்டம் என்ற பெயரில் இடம்பெறும் திட்டமிட்ட சிங்களக் குடியேற்றங்கள் அனைத்தும் நிறுத்தப்பட வேண்டும்.

* அண்மையில் அறிமுகப்படுத்தப்பட்ட  மொரகஸ்கந்த நீர்ப்பாசனத் திட்டத்தின் கீழ் வன்னிப்பிரதேசத்தில திட்டமிட்டு மேற்கொள்ளப்படும் சிங்களக் குடியேற்றங்கள் அனைத்தும் உடனடியாக நிறுத்தப்பட வேண்டும்.

* தொல்லியல் திணைக்களம், வனவள திணைக்களம், வன ஜீவராசிகள் திணைக்களம் உட்பட பல அரச திணைக்களங்கள் ஊடாக  மேற்கொள்ளப்பட்டு வரும் நில, வழிபாட்டு தல ஆக்கிரமிப்புக்கள் அனைத்தும் உடனடியாக நிறுத்தப்பட வேண்டும். மேற்குறிப்பிட்ட திணைக்களங்கள் ஊடாக  ஆக்கிரமிக்கப்பட்ட நிலங்கள் அனைத்தும் ஏற்கனவே வெளியிடப்பட்டுள்ள வர்த்தமானி பிரகடனங்களிலிருந்து விடுவிக்கப்பட வேண்டும்.

* போரால் பாதிக்கப்பட்ட வடக்கு, கிழக்கு மாகாணங்களில் அபிவிருத்தியையும் இளைஞர்களின் வேலைவாய்ப்புக்களையும் ஏற்படுத்துவதை நோக்காகக் கொண்டு வெளிநாடுகளில் வாழும் இலங்கையர்களிடமிருந்து நேரடி முதலீடுகளை இலகுவாக பெற்றுக்கொள்வதற்கு ஏதுவாக இங்கு காணிகளையும் மற்றும் நிதிகளையும் கையாள்வதில் இப்போது அவர்கள் எதிர்கொள்ளும் சட்டப்பிரச்சினைகளை தீர்க்க வேண்டும்.

* வடக்கு – கிழக்குக்கான அரச மற்றும் தனியார் துறைகளின் வேலை வாய்ப்புக்களில் அந்தந்த மாகாணத்தைச் சார்ந்த மக்களுக்கே முன்னுரிமை வழங்கப்பட வேண்டும்.

,* வடக்கு கிழக்கைப் போரால் பாதிக்கப்பட்ட பிரதேசமாகப் பிரகடனப்படுத்தி அதன் அபிவிருத்திக்கான நிதியைக் கையாள்வதற்கு வடக்கு, கிழக்கில் தெரிவுசெய்யப்பட்ட மக்கள் பிரதிநிதிகளின் நெறிப்படுத்தலில் பொதுக்கட்டமைப்பொன்றை உருவாக்குதல் வேண்டும்.

மேற்கூறிய கோரிக்கைகளில் உடனடியாக தீர்க்கப்பட வேண்டிய விடயங்களுக்கு ஜனாதிபதித் தேர்தல் முடிவடைந்து புதிய ஜனாதிபதி பதவியேற்று மூன்று மாத காலப் பகுதிக்குள் தீர்வு காணப்பட வேண்டும்.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்