கல்முனை தமிழ்ப் பிரதேச செயலகத்தினை மறந்த தமிழ்த் தலைமைகளும் பல்கலை மாணவரும்!

ஜனாதிபதித் தேர்தலில் தமிழ் மக்கள் யாரை ஆதரிப்பது தொடர்பில் – தமிழ்த் தேசத்தின் ஒற்றுமையை – தமிழ் மக்களின் அபிலாஷைகளை எழுத்துமூலம் பிரதிபலித்து, அதனை நிறைவேற்ற உத்தரவாதம் அளிப்பவருக்கே ஆதரவளிப்பதென 5 தமிழ்க் கட்சிகள் ஒப்பமிட்டுள்ளன. இது வரவேற்கத்தக்க விடயம். வடக்கு, கிழக்கு பல்கலை மாணவர்களின் இந்த முயற்சி பாராட்டுக்குரியதுதான். ஆனால், இந்த தீர்மானங்களில் தலையாய இடம்பெறவேண்டியதாக அமைந்திருப்பது கல்முனை தமிழ் பிரதேச செயலக விவகாரம். இந்த விவகாரத்தைத் தமிழ் கட்சிகளின் தலைமைகளும் வடக்கு, கிழக்கு பல்கலை மாணவர்களும் மறந்துவிட்டார்களா அல்லது மறைத்துவிட்டார்களா? என்பதுதான் கேள்வி.

1989 ஆம் ஆண்டு வர்த்தமானி ஊடாக அங்கீகாரம் கல்முனை வடக்கு தமிழ் பிரதேச செயலகத்துக்கு வழங்கப்பட்டது. ஆனால், சில அரசியல்வாதிகள் இன்றுவரை அதை செயற்பட விடாது தடுத்து வருகின்றனர்.

கல்முனை வடக்கு பிரதேச செயலகம் என்பது கரவாகு வடக்கு உப பிரதேச செயலகமாக 31 கிராம சேவகர்கள் பிரிவை உள்ளடக்கி 1989 ஆம் ஆண்டு வர்த்தமானி ஊடாக பிரசுரிக்கப்பட்டது முதல் இயங்கி வருகிறது.

கரவாகு வடக்கு செயலகமும், நாவிதன் வெளி செயலகமும் இயங்க அன்றைய உள்நாட்டு அலுவல்கள் மற்றும் பொது நிர்வாக அமைச்சர் தேவநாயகம் அம்பாறை அரச அதிபருக்கு 1989 ஆம் ஆண்டு ஜனவரி மாதம் 12 ஆம் திகதி இடப்பட்ட கடிதம் ஒன்றை அனுப்பியுள்ளார்.

அதன் பின்னர் 1993 ஆம் ஆண்டு அன்றைய காலநேரத்தில் இலங்கையில் 28 உபசெயலகங்கள் (கல்முனை வடக்கு உட்பட) இயங்கி வந்தன.
குறித்த 28 பிரதேச உப செயலகங்களைத் தரமுயர்த்த அமைச்சரவை அனுமதி வழங்கியிருந்தது. அத்துடன் 1994 ஆம் ஆண்டு முதல் குறித்த 28 செயலகத்துக்குமான நிதி ஒதுக்கீட்டுக்கும் அமைச்சரவை அனுமதி அளித்திருந்தது. அமைச்சரவை தீர்மானம் கடந்த 1993.07.28 அன்று நிறைவேற்றப்பட்டு 1993 ஆம் ஆண்டு செப்ரெம்பர் மாதம் 3 ஆம் திகதி கடிதம் மூலம் அதை அரசாங்கம் அறிவித்துள்ளது.

அரசாங்கம் அனுமதி அளித்தும் ஒரு சில அரசியல்வாதிகளின் அரசியல் நடவடிக்கைக்காக இலங்கையின் குறித்த ஒரு பகுதியினை நிர்வாக ரீதியில் கூட நடைமுறைப்படுத்த முடியாமல் போயுள்ளது என்பதே வரலாறு.

அதாவது சுமார் 25 வருடங்களுக்கு மேல் ஓர் அரசாங்க வர்த்தமானி பிரகடனத்தை நடைமுறைப்படுத்த முடியவில்லை என்றால் கிழக்கில் தனியான இஸ்லாமிய நிர்வாகம் ஒன்றிற்கு அரசு ஆதரவு வழங்கி உள்ளது என்பதே அர்த்தம். அதற்கு தற்போது அரசுக்கு ஆதரவு வழங்கி அரசின் பங்காளிகளாக முண்டுகொடுக்கும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பும் துணைபோகின்றமைதான் வேதனைக்குரிய விடயம்.

தேசிய அரசு கலைக்கப்பட்டதன் பின்னர் நாடாளுமன்றத்தில் பாதீட்டை அரசு கொண்டுவந்தபோது கிழக்கு மாகாண தமிழ் மக்களிடமிருந்து தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு பாரிய அழுந்தம் வந்தது இந்த பாதீட்டை தமது கல்முனை பிரதேச செயலகத்துக்கான தீர்வுக்காகப் பயன்படுத்துமாறு. கிழக்கு மாகாணத்தில் கூட்டமைப்பைப் பிரதிநிதித்துவப்படுத்தும் நாடாளுமன்ற உறுப்பினர்கள் தம்கையாலாகாத் தனத்தை எண்ணி கூனிக்குறுகி நின்றனர்.

பாதீடு நாடாளுமண்றத்தில் வந்த அன்று 10-07-2019 திகதியிடப்பட்டு கல்முனை வடக்கு தமிழ் பிரதேச செயலகத்துக்கு கணக்காளர் நியமிக்கப்பட்டார். கிழக்கு வாழ் தமிழ் மக்கள் வெடி கொளுத்தி ஆர்ப்பரித்தனர். எமது நாடாளுமன்ற உறுப்பினர்கள் வழமைபோன்று ரணில் அரசை முண்டுகொடுத்து காப்பாற்றினர்.  ஊடகங்களும் சமூகவலைத் தளங்களும் கூட்டமைப்பை  புழுகித்தள்ளி கட்டுரைகளையும் செய்திகளையும் வரைந்தன. ஆனால் அனைத்தும் புஷ்வானம் ஆகிற்று.

தற்போது நாட்டின் அதியுயர் ஜனாதிபதியைத் தெரிவுசெய்கின்ற தேர்தல் வரவிருக்கின்றது. கடந்த ஜனாதிபதித் தேர்தலில் எவ்வித எழுத்துமூலமான நிபந்தனைகளும் வழங்காமல் மைத்திரியை கொண்டுவந்துவிட்டு பின்னர் குத்துது குடையுது என்று கூட்டமைப்பு புலம்பியமைபோன்று இம்முறை அமையக்கூடாதென பல்கலை மாணவர்கள் தமிழரின் ஏகோபித்த ஆதரவும் ஒருவருக்கு ஏற்படுத்தி – வெற்றியாளரைத் தீர்மானிக்கும் கிங் மேக்கராக வடக்கு – கிழக்கு வாக்குகள் உள்ளமையால் எமது ஒற்றுமைத்தன்மையின் அவசியத்தை உணர்ந்து 6 கட்சிகளில் ஒன்று குறுக்கே பாய மற்றைய ஐந்தையும் ஒரு குடைக்குள் கொண்டுவந்தனர். இந்தக் கட்சிகள் தமிழ் மக்களின் அபிலாஷைகளை உள்ளடக்கிய நிபந்தனைகளை முன்வைத்து – ஜனாதிபதி வேட்பாளர்கள் பிரதானமான இருவருடனும் பேரம்பேசுவர். எமது அபிலாஷைகள் அடங்கியவற்றை நிவர்த்திசெய்வதாக எழுத்துமூலம் கோருவர். நல்ல விடயம்தான்.

வடக்கு – கிழக்கு பிரதேசத்தில் உள்ள அனைத்துக் கட்சிகள் சார்பிலும் பல்கலைக்கழக மாணவர்களுடனான சந்திப்பில் பங்குகொண்ட அனைவரும் வடபகுதியைச் சார்ந்தவர்கள். நான் இதில் பிரதேசவாதம் பேசவில்லை. ஆனால்,  கிழக்கில் இன்று சூறாவளியாக உழன்றுகொண்டிருக்கும் தமிழ் மக்களின் பிரச்சினையாகிய கல்முனை வடக்கு தமிழ் பிரதேச செயலக விவகாரம் தொடர்பில் பல்கலை மாணவருடனான சந்திப்பில் பேசப்படாமைக்கான காரணம் கிழக்கு மாகாணத்தைப் பிரதிநிதித்துவப்படுத்தும் எவரும் கலந்துகொள்ளாமையே  என்று எண்ணத் தோன்றுகின்றது. பல்கலை மாணவருடனான சந்திப்பில் மக்கள் பிரதிநிதிகளின் கிழக்கு பிரதிநிதித்துவம் புறக்கணிக்கப்பட்டுள்ளது. கிழக்கு மக்களின் பிரதான அபிலாஷையும் கடாசி எறியப்பட்டுள்ளது.

ஜனாதிபதித் தேர்தலைத் தொடர்ந்து பெரும்பாலும் நாடாளுமன்றத் தேர்தல் அறிவிக்கப்படலாம் என்று அரசியல் அவதானிகளால் கருதப்படுகின்றது. நாட்டை ஆளுகின்ற அதியுயர் பீடத்தில் 2015 ஆம் ஆண்டு தேர்தலைப்போல் 2020 இலும் பேரம் பேசும் சக்தியாக – தற்போதுள்ள 14 ஆசனத்துக்கு மேலாக இன்னும் பல ஆசனங்களைப் பெற்று பலம்மிக்க சக்தியாக – கூட்டமைப்பு திகழவேண்டும் என்றால் கிழக்கு மக்களின் பாரிய பிரச்சினையாகிய பிரதேச செயலக விவகாரத்தையும் ஜனாதிபதித் தேர்தலுக்கான பேரம்பேசுபொருளாக உள்ளடக்கவேண்டும். தவறின், கடந்த கிழக்கு மாகாணசபைத் தேர்தலில் அதிகப்படியான ஆசனத்தைப் பெற்றும் முதலமைச்சர் பதவியை முஸ்லிமுக்குக் கூட்டமைப்பு தாரைவார்த்து, ஆட்சியமைத்தபின் ஹிஸ்புல்லா தெரிவித்தமைபோன்று ”கிழக்கு முஸ்லிம்களின் நாடு” என்பது நிஜமாவதற்கு கூட்டமைப்புத் தலைமைகள் தாமே வழி அமைத்துக் கொடுப்பதாக அமையும். இதில் தவறு விடுவோமாயின் கிழக்கு பிரதிநிதித்துவத்தை நாம் மறந்தவர்களாக்கப்படுவோம். சுதாகரிப்பரா தமிழ்த் தலைமைகள்….?

கலாநிதி அகிலன் முத்துக்குமாரசுவாமி

 

அனைவரதும் கருத்துக்களையும் எதிர்பார்க்கின்றோம்.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்