மன்னார் மாவட்டத்திற்குட்பட்ட பாடசாலைகள் வடமேல் மாகாணத்துடன் இணைப்பு – செல்வம் எம்.பி.

வடக்கு மாகாண சபையின் மன்னார் மாவட்டத்திற்குட்பட்ட பல பாடசாலைகள் வடமேல் மாகாணத்துடன், இணைக்கப்பட்டுள்ளதாக நாடாளுமன்ற உறுப்பினர் செல்வம் அடைக்கலநாதன் தெரிவித்துள்ளார்.

இந்த விடயம் தொடர்பாக வடக்கு மாகாண ஆளுநர் சுரேன் ராகவனிடம் முன்வைத்த கோரிக்கைகளை ஏற்று அவர் இவ்வாறு நடவடிக்கை எடுத்துள்ளதாக நாடாளுமன்ற உறுப்பினர் செல்வம் அடைக்கலநாதனின் ஊடக பிரிவு வெளியிட்டுள்ள அறிக்கையில்  தெரிவிக்கப்பட்டுள்ளது.

குறித்த அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது, “புத்தளத்தில் இயங்கிவந்த மன்னார் மாவட்டத்தை சேர்ந்த பாடசாலை உத்தியோகத்தர்களுக்கான சம்பளம் வடக்கு மாகாணத்திலிருந்து அனுப்பப்பட்டு வந்தது.

1990ஆம் ஆண்டு வடக்கு மாகாணத்திலிருந்து முஸ்லிம் மக்கள் வெளியேற்றப்பட்டதால், அம்மாணவர்கள் அங்கு கல்வி கற்பதற்காக ஏற்பாடுகள் செய்துகொடுக்கப்பட்டிருந்தன. நாட்டில் சுமூகமான சூழ்நிலைகள் ஏற்பட்ட பின்னரும் அப்பாடசாலைகள் தொடர்ந்தும் புத்தளம் மாவட்டத்திலேயே இயங்கிக்கொண்டிருந்தன.

மன்னார் மாவட்டத்தைச் சேர்ந்த மாணவர்கள் மன்னார் மாவட்டத்திலேயே கடுமையாக படித்து உயர்தரப் பரீட்சைக்கு தோற்றுகின்றனர்.

அவர்களின் பெறுபேறுகள் மன்னார் மாவட்டத்திலேயே வெளியிடப்பட்டாலும் புத்தளம் மாவட்டத்தில் இயங்கி வருகின்ற பாடசாலைகள் மன்னார் மாவட்டத்தினுள்ளேயே கணக்கெடுக்கப்பட்டுவரும் நிலையில், மன்னாரில் இருந்து மன்னாரிலேயே கல்வி கற்கின்ற மாணவர்களுக்கான வாய்ப்புகள் தட்டிப் பறிக்கப்படுகின்றமையினால் மாணவர்கள் கடுமையான பாதிப்புக்களை எதிர்நோக்கி வருகின்றனர்.

புத்தளத்தில் இயங்குகின்ற பாடசாலைகள் புத்தளம் மாவட்டதினுள்ளேயே பதிவு செய்யப்பட வேண்டும். இல்லையெனில் குறித்த பாடசாலைகள் மன்னார் மாவட்டத்திலுள்ள தமது சொந்த இடங்களில் இயங்கி கல்வி நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என்ற  தீர்மானம் வடக்கு மாகாண சபையால் நிறைவேற்றப்பட்டது.

முன்னாள் வடக்கு மாகாண ஆளுநரின் கவனத்திற்கு இவ்விடயம் கொண்டுசெல்லப்பட்டு அவர் இதற்கான நடவடிக்கைகளை மேற்கொண்டிருந்தார்.

எனவே இதை உடனடியாக கவனத்திற்கொண்டு குறித்த பாடசாலைகளை புத்தளம் மாவட்டத்தினுள் பதிவு செய்யுமாறும் இல்லையெனில் அப்பாடசாலைகள் மன்னார் மாவட்டத்தில் இயங்க நடவடிக்கை எடுக்குமாறு செல்வம் எம்.பி ஆளுநரிடம் வேண்டுகோள் விடுத்திருந்தார்.

இது தொடர்பாக ஆக்கபூர்வமான நடவடிக்கைகளை மேற்கொண்டு குறித்த பாடசாலைகளை புத்தளம் மாவட்டத்தினுள் இணைத்து வன்னி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் செல்வம் அடைக்கலநாதனின் கோரிக்கையினை வடக்கு மாகாண ஆளுநர் நிறைவேற்றியுள்ளார்” என தெரிவிக்கப்பட்டுள்ளது.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்