கொலைகாரர்களுடன் இணைந்து சு.கவை காட்டிக் கொடுத்து விட்டார் மைத்திரிபால – சந்திரிகா குற்றச்சாட்டு

“கொலைக்காரக் கும்பலுடன் உடன்படிக்கை செய்து தனிப்பட்ட நலன்களுக்காக ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியைக் காட்டிக் கொடுத்து விட்டார் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன.”

– இவ்வாறு ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் முன்னாள் தலைவியும் முன்னாள் ஜனாதிபதியுமான சந்திரிகா பண்டாரநாயக்க குமாரதுங்க குற்றம்சாட்டியுள்ளார்.

ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி ஆதரவாளர்களுக்கு அனுப்பியுள்ள பகிரங்க கடிதத்திலேயே அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.

அதில் மேலும் குறிப்பிடப்பட்டுள்ளதாவது:-

“நாட்டின் ஜனாதிபதி உள்ளிட்ட சந்தர்ப்பவாதத் தலைவர்கள், கட்சியின் 95 வீதமான அமைப்பாளர்களின் கருத்துக்களை நிராகரித்து, தனிப்பட்ட இலாபத்துக்காக சதிகாரர்களுடன் ஒரு உடன்பாட்டுக்குச் சென்றுள்ளனர்.

ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி. ஜனநாயகத்தை மதித்து – ஆதரித்த ஒரு கட்சியாக இருந்து வருகின்றது.

எங்கள் கட்சி கொலைகாரர்கள், மோசடி செய்பவர்கள் மற்றும் ஊழல்வாதிகளுக்கு இடமளிக்கவில்லை.

மீண்டும் அநீதி ஆட்சி செய்வதற்கு ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி அனுமதிக்காது.

ஜனாதிபதித் தேர்தலில் எமது கட்சி வேட்பாளர் ஒருவரை முன்னிறுத்தாமல் போனது வரலாற்றில் இதுவே முதல் தடவை.

நாங்கள் ஜனாதிபதியை, பிரதமர்களை உருவாக்கியிருக்கின்றோம். ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சிக்கு நேர்ந்த கதியைப் பார்த்து என் இதயம் அழுகின்றது.

இத்தகைய உடன்பாடுகள், ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியை அழிக்க வழிவகுக்கும். சுதந்திரக் கட்சி ஆதரவாளர்கள் அனைவரும், எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலில் அதிக கவனத்துடன் இருக்க வேண்டும்.

இந்தக் கட்சியை அழிக்க எடுக்கும் முயற்சிகளுக்கு எதிராக நாம் எழ வேண்டும்.

கட்சியையும் அதன் கொள்கைகளையும் பாதுகாப்பதற்கான போராட்டத்தைத் தொடங்கியவர்களுக்கு எனது உறுதியான ஆதரவை வழங்குகின்றேன்” – என்றுள்ளது.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்