அரசியல் சேவைக்காகவே தேர்தலில் போட்டியிடுகின்றேன் – மகேஸ் சேனாநாயக்க

தான் அரசியல்வாதியாக வேண்டும் என்ற நோக்கத்தில் இந்தத் தேர்தலில் களமிறங்கவில்லை எனவும் அரசியல் சேவைக்காகவே களமிறங்கியுள்ளதாகவும் தேசிய மக்கள் இயக்கத்தின் ஜனாதிபதி வேட்பாளர் மகேஸ் சேனாநாயக்க தெரிவித்துள்ளார்.

தேர்தல் பிரசார கூட்டம் ஒன்றில் கலந்து கொண்டு உரையாற்றிய போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.

இதன்போது தொடர்ந்தும் கருத்து வெளியிட்டுள்ள அவர், ‘5 வருடங்களுக்கு முன்னர் திருடர்களை பிடிப்போம் என்று ஒரு குழு இந்த நாட்டின் ஆட்சியைக் கைப்பற்றியது. அவர்கள் திருடர்களைப் பிடித்தார்களா? இல்லை.

ஒன்றரை வருடங்களுக்கு முன்னர் நாட்டின் பாரிய பெரிய திருட்டு வேலையை இன்னொரு தரப்பினர் செய்தார்கள்.

ஆனால், அனைவரும் இன்று நல்லவர்களாக மாறியுள்ளார்கள். இதனை மக்கள் அவதானிக்க வேண்டும்.

2015 ஆம் ஆண்டு மக்கள் அனைவரும் மாற்றமொன்றை எதிர்ப்பார்த்தே இந்த ஆட்சியை கொண்டுவந்தார்கள்.

70 வருடங்களாக இரண்டு கட்சிகளும் மாறிமாறி ஆட்சிக்கு வந்தன. அப்போது ஒன்றும் நடக்கவில்லை.

இரண்டு கட்சிகளும் ஒன்றிணைந்தும் ஆட்சி செய்தன. அப்போதும் இந்த நாட்டுக்கு முன்னேற்றமில்லை.இதனை மக்கள் சிந்தித்துப் பார்க்க வேண்டும்.

நான் 7 ஆம் திகதி வேட்புமனுத் தாக்கல் செய்யவுள்ளேன் என்பதை அறிந்த சிலர், இதனை தடுக்க முயற்சி செய்தார்கள்.

எனினும், எனது முயற்சியை நான் ஒருபோதும் கைவிடவில்லை. இனியும் கைவிடப் போவதில்லை.

நான் அரசியல்வாதியாக வேண்டும் என்று இந்தத் தேர்தலில் களமிறங்கவில்லை. அரசியல் சேவைக்காகவே வந்துள்ளேன்’ எனக் குறிப்பிட்டுள்ளார்.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்