எமது மக்களின் அடிப்படைப் பிரச்சினை என்னவென்றே தெரிந்துகொள்ள முடியாத ஒருவரை எமது மக்கள் எவ்வாறு நம்புவார்கள்…?

வடக்கு கிழக்கு மக்களின் அடிப்படைப் பிரச்சினை என்னவென்று இதுவரையில் அறிந்துகொள்ள முடியாத ஒருவரை, தமிழ் மக்களுக்கு எவ்வித அநீதியுமே இந்த நாட்டில் இடம்பெறவில்லை, அனைத்துமே ஊகத்தின் அடிப்படையில் சொல்லப்படுகின்ற குற்றச்சாட்டுக்கள் என்று சொல்லும் ஒருவரை எமது மக்கள் எவ்வாறு நம்பமுடியும் என தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் ஞா.ஸ்ரீநேசன்

ஜனாதிபதி வேட்பாளர் கோட்டபாய ராஜபக்ஷ அவர்கள் வடக்கு கிழக்கு மக்களின் பிரச்சினைகள் சம்மந்தமாக ஊடகங்களுக்கு வெளியிட்டுள்ள கருத்துக்கள் தொடர்பிலேயே இன்றைய தினம் அவர் இவ்வாறு தெரிவித்தார்.

இதன்போது அவர் மேலும் தெரிவிக்கையில்,

வடகிழக்குப் பகுதிகளில் காணாமலாக்கப்பட்டவர்கள் மற்றும் இறுதி யுத்தத்தின் போது சரணடைந்தவர்கள் அல்லது ஒப்படைக்கப்பட்டு காணாமலாக்கப்பட்டவர்கள் என்பது தொடர்பில் ஊடகவியலாளர்கள் ஜனாதிபதி வேட்பாளர் கோட்டபாயவிடம் கேள்வியெழுப்பும் போது அது ஒரு போலியான குற்றச்சாட்டு, அவ்வாறான ஒரு விடயமே இடம்பெறவில்லை, இவையெல்லாம் ஊகத்தின் அடிப்படையில் சொல்லப்பட்டவை என்று குறிப்பிட்டுள்ளார். காணாமல் ஆக்கப்பட்டவர்கள் தொடர்பில் அவர்களால் நியமிக்கப்பட்ட பரணகம ஆணைக்குழுவினாலேயே எமது மக்கள் காணாமல் ஆக்கப்பட்டுள்ளார்கள் என்ற விடயம் ஏற்றுக்கொள்ளப்பட்ட ஒன்று. அவ்வாறு அவர்களால் நியமிக்கப்பட்ட ஆணைக்குழுவின் அறிக்கையைக் கூட அவர் இதன் போது மறுதளிக்கின்றார். இவ்வாறு இந்த நாட்டில் தமிழ் மக்களின் முக்கிய பிரச்சினைகள் தொடர்பில் எதுவுமே இடம்பெறவில்லை என்பது போல் கருத்துக்களை வெளியிடும் இவரை தமிழ் மக்கள் எவ்வாறு நம்புவது என்கின்ற விடயம் மக்கள் மத்தியில் கேள்வியாக இருக்கின்றது.

தமிழ் மக்களுக்கு கல்வி, பொருளாதாரம், வேலைவாய்ப்பு என்கின்ற பிரச்சனைகளைத் தவிர வேறு எந்தப் பிரச்சனைகளுமே கிடையாது என்று அவர் குறிப்பிட்டுள்ளமையானது அவர் எமது முக்கிய பிரச்சனையான அரசியல் தீர்வு தொடர்பில் எத்தகைய நிலைப்பாட்டில் உள்ளார் என்பதையும், எமது பிரச்சனைகள் தொடர்பில் எதுவுமே அறியாதவராக இருப்பது போன்ற ஒரு தோற்றப்பாட்டினையுமே காட்டுகின்றது.

இவரின் இவ்வாறான கருத்துக்கள் இவர் சகல மக்களின் பிரதிநிதியாக, சகல மக்களினதும் வேட்பாளராகச் செயற்படுவது போன்று தெரியவில்லை. அத்துடன் ஒரு வேட்பாளர் என்பவர் தற்துணிவுடன் அனைத்துக் கேள்விகளுக்கும் தானே பதில் வழங்கக் கூடியவராக இருக்க வேண்டும். ஆனால் கோட்டபாய அவர்கள் சில கேள்விகளுக்கு அவரது அண்ணனையும், சில கேள்விகளுக்கு வேறுநபர்களையும் பதில் வழங்க எதிர்பார்க்கின்றார். இவ்வாறானவர் தன்னிச்சையான முடிவெடுத்து இயங்கும் திராணி கொண்டவராக எவ்வாறு செயற்படுவார்?

கோட்டபாயவின் பதில்கள் ஒரே ஒரு விடயத்தை மாத்திரம் மையப்படுத்துவதாகவே இருக்கின்றது. இராணுவத்தைப் பலப்படுத்தல், புலனாய்வுப் பிரிவினைப் பலப்படுத்தல், குற்றஞ்சாட்டப்பட்டு சிறையிலுள்ள இராணுவத்தினரை விடுவிப்பது இவ்வாறு இவரது சிந்தனைகள் எல்லாம் இராணுவமயப்படுத்தப்பட்ட ஒரு சிந்தனையாகவே இருக்கின்றது. புறையோடிப்போயுள்ள இனப்பிரச்சினை தொடர்பில் எவ்வித கருத்தும் சொல்ல அவர் விரும்பவில்லை. நாட்டின் பொருளாதாரம் தொடர்பில் பேசுவதாக இல்லை, தமிழ் அரசியற் கைதிகள் தொடர்பில் அவர் பேசுவதாகவும் இல்லை. இவற்றையெல்லாம் விட்டு விட்டு இராணுவம் தொடர்பாக மாத்திரம் அவர் சிந்திக்கின்றார் என்றால் அவரது சிந்தனை ஜனநாயக சிந்தனையில் இருந்து முழுக்க முழுக்க விடுபட்டு இராணுவ சிந்தனையோடு இருப்பதையே காட்டுகின்றது. இந்த நாட்டின் அனைத்து தரப்பினதும் பிரதிநிதியாக இருப்பதை விடுத்து அவர் சார்ந்த ஒரு குழுவிற்கு தலைமை தாங்கும் ஒருவராக இருப்பது போலவே அவரின் செயற்பாடுகள் காணப்படுகின்றது.

கோட்டபாய அரசியல் ரீதியாகவோ, பொருளாதார ரீதியாகவோ, சர்வதேச ரீதியாகவோ தெளிவுள்ளவராகத் தெரியவில்லை. ஐக்கியநாடுகள் சபையுடன் இணைந்து செயற்படுவதற்கு தயாராக இருப்பதாகத் தெரிவிக்கும் அதேவேளை ஐக்கிய நாடுகள் சபையினால் இலங்கை தொடர்பாக முன்வைத்த விடயங்களை மறுதளிக்கின்றார். இவ்வாறாக கோட்டபாய அவர்களின் கருத்துக்களை வைத்துப் பார்க்கும் போது ஒட்டுமொத்தமாக ஒரு ஜனநாயக நாட்டின் தலைவருக்குரிய பண்புகள் முழுக்க முழுக்க இல்லாத ஒருவராகவும், மீண்டும் ஒரு மோசமாக சூழ்நிலை ஏற்படுவதற்கான வாய்ப்புக்கள் இருப்பதாகவுமே அவரின் உள்ளக்கிடக்கைகள் எமக்குப் புலப்படுத்துகின்றது.

இந்த நிலையில் எங்களில் சிலர் தங்களின் சுயநலன்களுக்காக செயற்படுகின்றார்கள். கடந்த காலங்களில் வெள்ளைவேன் கடத்தல்கள், காணாமல் ஆக்கப்பட்டமை தொடர்பில் வாய்கிழியக் கதைத்தார்கள். அதுமட்டுமல்லாது அழிக்கப்பட்ட மக்களின் பிரதிநிதிகளாக தங்களைக் காட்டி மக்களின் வாக்குகளைப் பெற்று தற்போது முழுமையாகத் தலைகீழாக மாறி அடிவருடி அரசியலை மேற்கொள்கின்றார்கள். இவர்கள் எமது மக்களை ஏமாற்றி தங்களின் உழைப்புவாத அரசியலை மேற்கொள்வதற்கு அக்கறையாக இருக்கின்றார்கள்.

காணாமல் ஆக்க்பட்டவர்கள் தொடர்பில் எமது மக்கள் வருடக் கணக்கில் போராடிக் கொண்டிருக்கும் போது அதனை ஒரு தூசு போன்று அவமதித்து இவை ஊகத்தின் அடிப்படையில் சொல்லப்படுகின்ற குற்றச்சாட்டுக்கள் என்று கூறி சர்வதேசத்தையும், எமது மக்களையும் ஏமாற்றுகின்ற நாடகத்தினை மேற்கொள்கின்றார்கள். அதற்கு நம்மவர்களும் முற்போக்காளர்கள் என்ற போர்வையில் பிற்போக்குச் சிந்தனை கொண்டு துணைநிற்கின்றார்கள்.

மது மயக்கத்தில் மக்களை வைத்துக் கொண்டு தங்களில் அரசியற் செயற்பாடுகளை மேற்கொள்வதற்குப் பலர் முயற்சிக்கின்றார்கள். எனவே இன்றைய அரசியல் நிலைமையில் தமிழ் மக்கள் மிகக் கவனமாக முடிவெடுக்க வேண்டிய ஒரு தருணம் இது. தன்னுடைய தனிப்பட்ட சிந்தனையில் அரசியல் தீர்வு பற்றி தெரியாத ஒருவர், பொருளாதார விடயங்கள் தொடர்பில் தெரியாத ஒருவர் எவ்வாறு நாட்டுக்கான தலைவராக வரமுடியும்.

இருக்கக்கூடிய ஜனநாயக சூழ்நிலையைக் குலைத்து விட்டு நாங்கள் மீண்டும் ஒரு பயங்கரமான சூழலுக்குள் வாழப் போகின்றோமா என்பது பற்றி எமது மக்கள் சிந்திக்க வேண்டும். இது தொடர்பில் எமது மக்கள் சரியான முடிவினை எடுப்பார்கள். ஆனால் அடிவருடி அரசியல்வாதிகள் அவர்களின் பொய்மூட்டைகளை அவழ்க்கத் தொடங்கி விட்டார்கள்;. எனவே மக்கள் இது தொடர்பில் இன்னும் அவதானமாக இருக்க வேண்டும். இவ்வாறான மோசடித் தனமான, ஊழல் தனமான அரசியலுக்கு நாங்கள் பலிகடாவானால் அதற்கான விளைவுகளை எதிர்வரும் ஐந்து ஆண்டுகளுக்கு அனுபவிக்க நேரிடும் என்பதில் எவ்வித சந்தேகமும் இல்லை.

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் மிக முக்கிய கோரிக்கையான அரசியல் தீர்வினை உதறித் தள்ளுகின்றவர்கள் மீது அக்கறை கொள்ள வேண்டிய அவசியம் கிடையாது. பணத்தாலும், மதுவாலும் தமிழ் மக்களின் எண்ணங்களையும், கொள்கைகளையும் ஒருபோதும் வாங்கிக் கொள்ள முடியாது என்கின்ற விடயத்தைத் தமிழ் மக்கள் தக்க தருணத்தில் காட்டுவார்கள் என்று தெரிவித்தார்.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்