அனைவருக்கும் சமமான சுகாதார சேவையை வழங்குவேன் – அநுர உறுதி

இலங்கையில் வாழும் அனைத்து மக்களுக்கும் சமமமான சுகாதார சேவை கிடைக்கும் வகையிலான பொதுக் கொள்கையொன்றை தமது ஆட்சியில் கொண்டுவருவதாக தேசிய மக்கள் சக்தியின் ஜனாதிபதி வேட்பாளர் அநுரகுமார திசாநாயக்க தெரிவித்தார்.

கொழும்பில் இடம்பெற்ற நிகழ்வொன்றில் கலந்துகொண்டு உரையாற்றுகையிலேயே அவர் இவ்வாறு கூறினார்.

தொடர்ந்தும் கருத்து வெளியிட்ட அவர், “வறுமையில் உள்ள மக்கள், மரணத்தை தேர்ந்தெடுக்கும் வகையிலான சுகாதாரக் கொள்கையே எமது நாட்டில் தற்போது காணப்படுகிறது.

பணம் இருந்தால் சிங்கப்பூரிலுள்ள குயின் எலிசபத் வைத்தியசாலைக்குக்கூட சென்று சிகிச்சைப் பெற்றுக்கொள்ளலாம். இதுதான் இன்றைய நிலைமை.

ஆனால், இதற்கான பணம் எங்கிருந்து வந்தது என்று இனிமேல்தான் ஆராயவேண்டும். முன்னாள் பிரதமர் டி.எம்.ஜயரத்ன, சிங்கப்பூருக்கு சென்று சிகிச்சைப் பெற்று வந்தார்.

இதற்காக இவருக்கு ஜனாதிபதி நிதியத்திலிருந்து 294 இலட்சம் ரூபாய் வழங்கப்பட்டுள்ளது.

இதற்குப் பின்னர், நான் ஒருநாள் அவரை நாடாளுமன்றில் சந்தித்தபோது, அவரின் தேக ஆரோக்கியம் தொடர்பாக வினவினேன். அதற்கு அவர், பெரிதாக ஒன்றுமில்லை. வெறும் காய்ச்சல்தான் என்று பதிலளித்தார். இந்த சிறிய காய்ச்சலுக்குதான் அவருக்கு 294 இலட்சம் ரூபாய் செலவு செய்யப்பட்டுள்ளது.

தற்போது எமது நாட்டில் நுரையீரல் பிரச்சினை காரணமான தினமும் 4-5 பேர் உயிரிழக்கின்றனர். இன்னும் சிலர் இந்த 21ஆம் நூற்றாண்டில்கூட, அடையாளம் கண்டுக்கொள்ளாத நோயினால் உயிரிழக்கிறார்கள்.

இந்த நிலைமையை மாற்ற வேண்டுமெனில், அனைவருக்கும் சமமான சுகாதாரக் கொள்கையொன்றை கொண்டுவர வேண்டும். சிலர் இதற்கு எங்கிருந்து பணம் கிடைக்கும் என்று கேள்வி கேட்பார்கள்.

2009ஆம் ஆண்டு முதல் இதுவரையான காலப்பகுதியில், ஸ்ரீலங்கன் விமான சேவையினால் 142 பில்லியன் ரூபாய் நஷ்டம் ஏற்பட்டுள்ளது.

அதாவது, இலங்கையிலுள்ள அனைத்து வைத்தியசாலைகளுக்கும் தலா 25 கோடி ரூபாயை இந்த பணத்தை மிச்சப்படுத்தி பகிர்ந்தளித்திருக்க முடியும்.

தாமரைக் கோபுர நிர்மாணிப்புப் பணிகளின்போது, கொள்ளையடிக்கப்பட்ட 200 கோடியை மிச்சப்படுத்தியிருந்தால், ஒவ்வொரு வைத்தியசாலைக்கும் தலா 1 கோடியையேனும் வழங்கியிருக்கலாம்.

இவ்வாறான இலஞ்ச- ஊழல்களை ஒழித்துக்கட்டினாலேயே அனைவருக்கும் சமமான சுகாதார சேவையை இலங்கையில் வழங்க முடியும்” என மேலும் தெரிவித்தார்.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்