மாநகர முதல்வருக்கும் – இலங்கைக்கான பிரித்தானிய உயர்ஸ்தானிகருக்கும் இடையில் விசேட சந்திப்பு

யாழ் மாநகர முதல்வர் கௌரவ இம்மானுவல் ஆனல்ட் அவர்களுக்கும் இலங்கைக்கான பிரித்தானிய உயர்ஸ்தானிகர் Sarah Hulton அவர்களுக்குமிடையில் விசேட சந்திப்பு ஒன்று யாழ் மாநகர முதல்வர் அலுவலகத்தில் (14) இடம்பெற்றது.

புதிதாக உயர்ஸ்தானிகராக பதிவேயற்ற அவர் பலருடனும் சந்திப்பை மேற்கொண்டு அறிமுகமாகி வருகின்றார். அந்த வகையில் என்னுடனும் சந்திப்பை மேற்கொண்டார். இவருக்கு முன்னர் இருந்த உயர்ஸ்தானிகரும் என்னுடன் சந்தித்திருக்கின்றார். அதன் தொடராக இவரும் சந்தித்தார். இச் சந்திப்பின் போது பல்வேறு விடயங்கள் தொடர்பில் கலந்துரையாடப்பட்டதாக ஊடகங்களுக்கு முதல்வர் கருத்து வெளியிட்டிருந்தார். அவர் தனது கருத்துரையில் முன்வைத்த விடயங்களாவன.

ஏற்கனவே முன்னர் தூதரகத்திலிருந்து முதல்வரை சந்தித்த அதிகாரிகள் மாநகரம் தொடர்பில் பல விடயங்களை உயர்ஸ்தானிகரிடம் கூறியிருப்பதாகவும், அது தொடர்பில் தான் அறிந்திருக்கின்றேன் என்றும், குறிப்பாக மாநகர சபையின் புதிய கட்டிடத்திற்கான அடிக்கல் நாட்டப்பட்ட விடயம் தொடர்பில் அறிந்திருப்பதாகவும் அதற்கு தனது வாழ்த்துக்களையும் கூறியிருந்தார்.

தொடர்ந்து மக்கள் எதிர்கொள்ளும் பொருளாதார நிலமைகள் தொடர்பில் உயர்ஸ்தானிகர் வினவினார் அதிலும் குறிப்பாக விமானசேவைகள், கடல் போக்குவரத்து சேவைகளும் பொருளாதாரத்தில் உயர்வை ஏற்படுத்துமா என வினவினார். அதற்கு பதிலளித்த முதல்வர் தற்பொழுது ஆரம்பிக்கப்படவிருக்கின்ற விமான சேவையும், அதன் பின்னர் ஆரம்பிக்கப்படவிருக்கின்ற கடல் போக்குவரத்து சேவைகளும் நிச்சயம் எமது மக்களின் பொருளாதார்ததில் பாரிய முன்னேற்றத்தை ஏற்படுத்தும் அதன் காரணமாகத்தான் அதனை விரைவுபடுத்த வேண்டும் என்று வலியுறுத்தி வருகின்றோம் என்றும் குறிப்பிட்டார்.

நடைபெறவுள்ள ஜனாதிபதித் தேர்தல் தொடர்பில் மக்களின் எண்ணப்பாடுகள் தொடர்பில் பல கோணங்களில் தான் அறிந்திருப்பதாகவும், குறிப்பிட்ட ஒரு வேட்பாளர் தொடர்பில் மக்கள் அதிருப்தியில் இருப்பதாகவும் அவதானிக்க முடிகின்றது என்றும் அது தொடர்பில் தங்களின் கருத்து என்ன என வினவினார். அதற்கு பதிலளித்த முதல்வர் நீண்ட கால போரை எதிர்கொண்ட எமது மக்கள் கடந்த அரசின் காலப்பகுதியில் எதிர்கொண்ட பிரச்சினைகள், உள்ளிட்ட விடயங்களை இன்னும் மறக்க வில்லை. அவர்களின் மனதில் இவை இன்றும் தாக்கங்களை செலுத்தி வருகின்றது. அவ்வாறு வலிகளை சுமந்து வருகின்ற மக்கள் நிச்சயமாக முடிவொன்றை எடுப்பார்கள். மக்கள் தெளிவாக இருக்கின்றார்கள். நிச்சயமாக மக்களை இம்முறை வழமையை விட அதிகளவில் விளிப்புணர்வூட்டி வாக்களிக்கச் செய்ய வேண்டும் என்றும் குறிப்பிட்டார்.

தொடர்ந்து யாழ் மாநகரத்திற்கும் – கிங்ஸ்டன் மாநகரத்திற்கும் இடையிலான அபிவிருத்;திசார் ஒப்பந்த ரீதியான வேலைத்திட்டங்களை தொடர்ந்தும் முன்னெடுப்பது தொடர்பில் முதல்வர் வினவியதற்கு உயர்ஸ்தானிகர் தானும் அதில் அக்கரையாக இருப்பதாகவும், தொடர்ந்தும் அபிவிருத்தி வேலைத்திட்டங்களை எதிர்காலத்தில் ஒப்பந்தம் ஒன்றை கைச்சாத்திட்டு நடைமுறை ரீதியாக முன்னெடுத்துச் செல்வது தொடர்பில் எதிர்காலத்தில் செயற்படுத்துவோம் என்று குறிப்பிட்டார்.

தொடர்ந்தும் முதல்வரால் தான் மாநகரில் நடைபெற்றுவரும் அபிவிருத்தி தொடர்பிலும், இது தவிர நகர அபிவிருத்தி அதிகாரசபையின் மூலமும், இலங்கை அரசின் மூலமும் யாழ் நகர் பகுதியில் மேற்கொள்ளப்பட்டு வரும் பேரூந்து நிலைய அபிவிருத்தி, யாழ் நகர் அபிவிருத்தி, மாநகரசபையினால் முன்னெடுக்கப்படும் திட்டங்கள், பாதாள சாக்கடைத்திட்டம் மற்றும் இந்திய அரசின் நிதி உதவியில் அமைக்கப்பட்டுவரும் கலாசார மண்டபப் பணிகள், தொடர்பிலும் முதல்வர் விளக்கியிருந்தார்.

இச் சந்திப்பில் யாழ் மாநகர ஆணையாளர், பிரதி ஆணையாளர் உள்ளிட்டோர் கலந்து கொண்டிருந்தனர்.

 

 

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்