வடக்கு, கிழக்கில் உள்ள பல்வேறு கட்சிகளும் சஜித்திற்கு ஆதரவு – திஸ்ஸ அத்தநாயக்க

வடக்கு, கிழக்கில் உள்ள பல்வேறு கட்சிகளும் சஜித் பிரேமதாஸவிற்கு ஆதரவு தெரிவித்துள்ளதாக குறிப்பிடப்படுகின்றது.

கொழும்பில் நேற்று(புதன்கிழமை) இடம்பெற்ற ஊடகவியலாளர்கள் சந்திப்பின் போதே முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் திஸ்ஸ அத்தநாயக்க இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.

இதன்போது தொடர்ந்தும் கருத்து வெளியிட்ட அவர், ‘கொழும்பில் இடம்பெற்ற ஊடக சந்திப்பில் கலந்துகொண்டிருந்த உதயகம்மன்பில, சஜித் பிரேமதாஸவிற்கான வைத்திய சான்றிதழை வெளியிட வேண்டும் என்று கூறியிருந்தார்.

இதனையிட்டு நாம் மிகவும் மகிழ்ச்சியடைகிறோம். ஏனெனில், உலகிலுள்ள ஏனைய நாடுகளில் ஜனாதிபதியாக போட்டியிடும் வேட்பாளர்களிடம் இவ்வாறான வைத்திய சான்றிதழ்கள் பெற்றுக்கொள்ளப்படும்.

இதனை நாம் வரவேற்கிறோம். அத்தோடு, இந்த நடைமுறையை தேர்தல்கள் சட்டத்தினுள் உள்ளடக்க வேண்டும் என்றும் நாம் கேட்டுக்கொள்கிறோம்.

சஜித் பிரேமதாஸவின் வைத்திய சான்றிதழ் போன்று, கோட்டாபய ராஜபக்ஷ உள்ளிட்ட ஏனைய வேட்பாளர்களது சான்றிதழ்களையும் வெளிப்படுத்த வேண்டும் என்று நாம் இவ்வேளையில் கேட்டுக்கொள்கிறோம்.

இன்று புதிய ஜனநாயக முன்னணியின் வேட்பாளர் சஜித் பிரேமதாஸவுக்கான ஆதரவு மக்கள் மத்தியில் அதிகரித்துக்கொண்டே செல்கிறது.

வடக்கு மற்றும் கிழக்கிலிருந்து பல்வேறு கட்சிகள் இன்று எம்முடன் இணைந்துக் கொண்டுள்ளார்கள்.

இவர்கள் அனைவரும், எந்தவொரு ஒப்பந்தமும் இல்லாமல்தான் இணைந்துள்ளார்கள் என்பதை நாம் இவ்வேளையில் கூறியே ஆகவேண்டும்.

இவ்வாறு அனைத்துத் தரப்பினரும் இன்று சஜித் பிரேமதாஸவினால்தான் இந்த நாட்டை கட்டியெழுப்ப முடியும் என்று உறுதியாக நம்புகிறார்கள்.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்