புதிய ஜனநாயக முன்னணியின் தேர்தல் விஞ்ஞாபனம் குறித்த அறிவிப்பு வெளியானது!

புதிய ஜனநாயக முன்னணியின் தேர்தல் விஞ்ஞாபனம் எதிர்வரும் 1ஆம் திகதி வெளியிடப்படவுள்ளது.

நிதியமைச்சர் மங்கள சமரவீர இது குறித்த தகவல்களை வெளியிட்டுள்ளார்.

இதுகுறித்து ஊடகங்களுக்கு கருத்து வெளியிட்டுள்ள அவர், ‘சிங்கள கிராமங்கள் மற்றும் விகாரைகளை இல்லாமல் செய்ய வேண்டும் என்று எம்மிடம் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு கோரிக்கை விடுத்திருப்பதாக சிங்கள பத்திரிகையொன்றில் வெளியாகியிருக்கும் செய்தி முற்றிலும் பொய்யானதாகும்.

மஹிந்த ராஜபக்ஷ அரசாங்கத்தைப் போன்று நாங்கள் தமிழீழ விடுதலைப் புலிகளின் உதவியை ஒருபோதும் பெற்றுக்கொண்டதில்லை.

தமிழ்த் தேசியக் கூட்டமைப்புடன் ஏற்படுத்திக்கொள்ளப்பட்ட புரிந்துணர்வு தொடர்பாக நாம் எமது தேர்தல் விஞ்ஞாபனத்துடன் பகிரங்கமாக வெளியிடுவோம்.

எம்முடைய தேர்தல் விஞ்ஞாபனத்தை எதிர்வரும் நவம்பர் மாதம் முதலாம் திகதி வெளியிடுவதற்கு எதிர்பார்த்திருக்கிறோம்.

அதனூடாக பிளவுபடாத ஒருமித்த நாட்டிற்குள் எவ்வித இன, மத பேதங்களுமின்றி அனைவரையும் ஒற்றுமையுடன் வாழச்செய்வதற்கான சஜித் பிரேமதாஸவின் தூரநோக்கு சிந்தனையை விளங்கிக்கொள்ள முடியும்.

அதேபோன்று மறுபக்கத்தில் கோட்டாபய ராஜபக்ஷ, இராணுவத்தினரை பாதுகாத்த ஒருவரைப் போன்று சித்தரிப்பதற்கு முயற்சிக்கின்றார்கள்.

ஆனால் உண்மையில் கோட்டாபய ராஜபக்ஷ என்பவர் நாட்டில் போர் உக்கிரமடைந்திருந்த வேளையில் நாட்டைவிட்டுத் தப்பிச்சென்ற ஒருவராவார்’ எனக் குறிப்பிட்டுள்ளார்.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்