சஜித்துக்கு தென் மாகாணத்தில் காத்திருக்கிறது பாரிய தோல்வி! – மஹிந்த ஆரூடம்

ஐக்கிய தேசியக் கட்சியின் ஜனாதிபதி வேட்பாளர் சஜித் பிரேமதாஸ தனது பிரதேச தேர்தல் தொகுதி உள்ளிட்ட தென் மாகாணத்திலும் பாரிய தோல்வியடைவார்.”

– இவ்வாறு எதிர்க்கட்சித் தலைவரும் ஸ்ரீலங்கா பொதுஜன முன்னணியின் தலைவருமான மஹிந்த ராஜபக்ச தெரிவித்தார்.

ஹொரணையில் இன்று நடைபெற்ற ஸ்ரீலங்கா பொதுஜன முன்னணியின் தேர்தல் பரப்புரைக் கூட்டத்தில் உரையாற்றும்போதே அவர் மேற்கண்டவாறு கூறினார்.

அவர் மேலும் தெரிவித்ததாவது:-

“நாட்டின் எதிர்கால தலைமுறையினருக்கு சொந்தமான தேசிய  வளங்களை அரசியல் தேவைகளுக்காகப்  பயன்படுத்தவும், விற்பனை செய்வதற்குமான அதிகாரம் 5 வருட காலம் ஆட்சிக்கு வரும் ஆட்சியாளர்களுக்குக் கிடையாது. எமது ஆட்சியில் தேசிய உற்பத்திகள், தேசிய வளங்கள் அனைத்தும் முழுமையாகப் பாதுகாக்கப்படும்.

மக்களுக்குச் சேவையாற்றியுள்ளவரையே ஜனாதிபதி வேட்பாளராகக் களமிறக்கியுள்ளோம். கடந்த நான்கரை வருட காலமாக நாட்டு மக்கள் பொருளாதார ரீதியில் பாரிய நெருக்கடிகளை எதிர்கொண்டுள்ளார்கள். எனவே, அனைத்து விடயங்களையும் முன்னிலைப்படுத்தி சிறந்த அரசியல் ரீதியான தீர்மானத்தை முன்னெடுக்க வேண்டும்” – என்றார்.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்