பட்டதாரிகளுக்கான நிரந்தர நியமனங்கள் வழங்கப்பட வேண்டும் – துரைரெத்தினம்

வருடா வருடம் பட்டப்படிப்பை நிறைவுசெய்கின்ற பட்டத்தாரிகளுக்கு நிரந்த நியமனங்களும் அந்தந்த வருடத்திலேயே வழங்கப்பட வேண்டும் என கிழக்கு மாகாணசபை சிரேஸ்ட உறுப்பினரும், ஈழமக்கள் புரட்சிகர விடுதலை முன்னணியின் முக்கியஸ்தருமான இரா.துரைரெத்தினம் பிரதமருக்கும், அமைச்சரவைக்கும் கடிதமொன்றை அனுப்பிவைத்துள்ளார்.

குறித்து கடிதத்தில், “இலங்கையிலுள்ள அனைத்து மாவட்டங்களிலும் வேலையில்லா பட்டதாரிகளின் பிரச்சினைகள் பலவருடகாலமாக இருந்து வருகின்றது.

இதில் சில மாவட்டங்களில் வேலையற்ற பட்டதாரிகள் மிகமிகக் குறைவாகவே உள்ளனர். ஆனால் வடக்கு கிழக்கை பொறுத்தவரையில் ஓவ்வொரு மாவட்டத்திலும் குறைந்தது ஆயிரத்திற்கும் மேற்பட்ட  பட்டதாரிகள் இருந்து வருகின்றனர். இது இலங்கை அரசாங்கத்திற்கு தெரிந்த விடயமே.

ஐந்து வருடங்களுக்கு ஒரு தடவை ஆட்சி மாற்றம் ஏற்படும் போது புதிய மக்கள் பிரதிநிதிகளுக்கு வேலையில்லா பட்டதாரிகளின் பிரச்சினை புதிய விடயமாகவே தெரிகின்றது.

பல சிரமத்திற்கு மத்தியில் பட்டப்படிப்பை நிறைவு செய்த பட்டதாரிகளுக்கான நியமனங்கள் வழங்காமல், அரசியல் சிபாரிசில் முறையற்ற விதத்தில் நியமனங்கள் வழங்கப்படுகின்றன. இது பட்டதாரிகளை விரக்திக்கு உள்ளாக்கியுள்ளது.

ஒவ்வொரு பட்டதாரிகளும் வெளிவாரி, உள்வாரி என பிரித்து, பலவீனப்படுத்தி நாற்பத்தைந்து வயதைத் தாண்டியும், நாற்பத்தைந்து வயது உடையவராகவும் தெருத்தெருவாக அலையவிடுவதென்பது இந்த அரசாங்கத்தின் பலவீனத்தைக் காட்டுகின்றது.

வாக்களிக்கும் உரிமையானது ஒரு மனிதனின் அடிப்படை உரிமையாகும். அந்த உரிமையைக் கூட புறக்கனிக்கும் அளவிற்கு பட்டதாரிகள் விரக்தியின் விளிம்பில் உள்ளனர்.

இது தொடர்பான பாரியதிட்டமிடலை செய்யவேண்டிய பொறுப்பு மத்திய அரசிடமே உள்ளது. மத்திய அரசு இவ்விடயம் தொடர்பாக கரிசனை காட்டி எதிர்வரும் காலங்களில் வேலையற்ற பட்டதாரிகளின் பிரச்சினைகளைத் தீர்க்க துரித நடவடிக்கை எடுக்க வேண்டும்.

எனவே வேலையற்ற பட்டதாரிகளை விரக்தியின் விளிம்பில் தள்ளாமல் எதிர்காலத்தில் அவர்களை வளமான நற்குணம் உள்ளவர்களாக வாழ வைப்பதற்கு வருடந்தோறும் வரவு செலவுத்திட்டத்தில் நிதியை ஓதுக்கீடு செய்து அந்தந்த வருடத்தில் பட்டப்படிப்பபை முடிக்கின்ற உள்வாரி,வெளிவாரி பட்டதாரிகளுக்கு நியமனம் வழங்க ஆவண செய்யுமாறு கேட்டுக்கொண்டுள்ளதாக குறித்த கடிதத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்