நாடா? குடும்பமா? எந்த ஆட்சி வேண்டும் என்பதை மக்கள் தெரிவுசெய்ய வேண்டும்

இம்முறை ஜனாதிபதித் தேர்தலில் நாட்டை ஆளும் ஆட்சி வேண்டுமா அல்லது குடும்ப ஆட்சி வேண்டுமா என்ற தெரிவை மக்கள் மேற்கொள்ள வேண்டும்.”

– இவ்வாறு ஐக்கிய தேசியக் கட்சியின் பொதுச்செயலாளரும் கல்வி அமைச்சருமான அகிலவிராஜ் காரியவசம் தெரிவித்தார்.

ஐக்கிய தேசியக் கட்சியின் தலைமையகமான சிறிகொத்தாவில் இன்று வியாழக்கிழமை ஏற்பாடு செய்யப்பட்டிருந்த ஊடகவியலாளர் சந்திப்பிலேயே அவர் மேற்கண்டவாறு கூறினார்.

அவர் மேலும் தெரிவித்ததாவது:-

“எமது புதிய ஜனநாயக முன்னணியின் சார்பில் ஜனாதிபதி வேட்பாளராக சஜித் பிரேமதாஸ களமிறங்கியிருக்கும் நிலையில் நாடளாவிய ரீதியில் 151 தேர்தல் பிரசாரக் கூட்டங்களை ஏற்பாடு செய்திருக்கின்றோம். அதேபோன்று பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவும் வடக்கு, கிழக்கு மாகாணங்களில் கூட்டங்களை ஏற்பாடு செய்திருக்கின்றார். அண்மைக்காலமாக ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் உறுப்பினர்கள், ஆதரவாளர்களில் பெரும் எண்ணிக்கையானோர் எம்மோடு இணைந்து கொண்டிருக்கின்றார்கள்.

அரச சேவையாளர்களுக்கு இதுவரை காலமும் எந்தவொரு அரசும் நாம் வழங்கியதைப் போன்ற வசதிகளையோ, சலுகைகளையோ வழங்கவில்லை. கடந்த 2015ஆம் ஆண்டில் நல்லாட்சி அரசை  அமைத்ததுமே அரச சேவையாளர்களின் ஊதியத்தை உடனடியாக அதிகரித்தோம். கடந்த அரசு பெற்றுக்கொண்ட கடன்களை மீளச்செலுத்த வேண்டிய நெருக்கடியான நிலையொன்று காணப்பட்ட போதிலும், நாம் நாட்டில் பல்வேறு அபிவிருத்தித் திட்டங்களை முன்னெடுத்தோம்.

கடந்த காலத்தில் அரசியல் மயப்படுத்தப்பட்டிருந்த சமுர்த்திக் கொடுப்பனவை எமது அரசு பதவியேற்ற பின்னர் அனைவருக்கும் நியாயமான முறையில் பெற்றுக்கொடுத்ததுடன், சமுர்த்திக் கொடுப்பனவுத் தொகையையும் அதிகரித்தோம்.

அதேபோன்று எனது அமைச்சின் கீழ் சிறுவர்களின் ஆரோக்கியத்தை வலுப்படுத்துவதற்கான கொடுப்பனவை வழங்கும் திட்டத்தை ஆரம்பித்தோம். மேலும், அருகிலுள்ள பாடசாலை சிறந்த பாடசாலை திட்டம், சுரக்ஷா காப்புறுதித்திட்டம், பாடசாலைகளுக்கான புதிய கட்டட நிர்மாணம், தொழிற்பயிற்சி வழங்கல் உள்ளிட்ட பல்வேறு திட்டங்களை அறிமுகப்படுத்தியதுடன், அவற்றைத் திறம்பட நடைமுறைப்படுத்தி வருகின்றோம்.

இவையனைத்தையும் விட 2015 ஆம் ஆண்டில் நாம் வெற்றிபெற்றதன் மூலம் நாட்டின் ஜனநாயகத்தையும், மக்களின் சுதந்திரத்தையும் உறுதிப்படுத்தினோம். அதனைத் தக்கவைத்துக்கொள்ள வேண்டிய நிலையிலேயே தற்போது நாம் அனைவரும் இருக்கின்றோம்.

இம்முறை ஜனாதிபதித் தேர்தலில் நாடா அல்லது குடும்பமா என்ற தெரிவை மக்கள் மேற்கொள்ள வேண்டும். தபால் மூலமான வாக்கெடுப்பு இன்னும் சில நாட்களில் நடைபெறவுள்ள நிலையில் அரச சேவையாளர்கள் அனைவரும் எமது அரசால் மேற்கொள்ளப்பட்ட சிறந்த திட்டங்களை மனதிலிருத்தி அன்னம் சின்னத்திற்கே வாக்களிக்க வேண்டும்.

இதுவரை காலமும் தாமே போரை முன்னின்று நடத்தியதாகக் கூறிவந்த கோட்டாபய ராஜபக்ச கடந்த செவ்வாய்க்கிழமை நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில் வைத்து, தாம் போருக்குத் தலைமை தாங்கவில்லை என்பதையும், பீல்ட் மார்ஷல் சரத் பொன்சேகாவே போரை வழிநடத்தினார் என்பதையும் ஏற்றுக்கொண்டார். ஏதேனுமொரு விடயத்தில் தவறுகள் ஏற்பட்டால் அதன் பொறுப்பை ஐக்கிய தேசியக் கட்சியின் மீது சுமத்துவதையும், சிறந்த விளைவுகள் ஏற்பட்டால் அதற்கான பாராட்டு முழுவதையும் தமதாக்கிக் கொள்வதையுமே மஹிந்த தரப்பு தொடர்ச்சியாகச் செய்து வருகின்றது” – என்றார்.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்