இளைஞர், யுவதிகளுக்கான கொள்கை உருவாக்கப்படும் – ஐ.தே.க!

இளைஞர், யுவதிகள் அனைவரையும் கருத்திற்கொண்டு கொள்கை ஒன்றினை உருவாக்கவுள்ளதாக ஐக்கிய தேசிய கட்சி தெரிவித்துள்ளது.

இரத்தினபுரியில் நேற்று(வியாழக்கிழமை) புதிய ஜனநாயக முன்னணியால் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த இளைஞரணி மாநாட்டில் கலந்துகொண்டு உரையாற்றிய போதே நாடாளுமன்ற உறுப்பினர் ஹர்ஷன ராஜகருணா இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.

இதன்போது அங்கு தொடர்ந்தும் கருத்து வெளியிட்ட அவர், ‘ஐக்கிய தேசியக் கட்சியுடன் எவ்வித தொடர்புமில்லாத பல்வேறு இளைஞர் அமைப்புக்கள் கூட சஜித் பிரேமதாஸவே இந்நாட்டின் ஜனாதிபதியாக வேண்டும் என்ற நிலைப்பாட்டிலேயே இருக்கின்றன.

அதேபோன்று நாம் அமைத்திருக்கும் தேசிய இளைஞரணி ஜனாதிபதித் தேர்தலை மாத்திரம் மையப்படுத்தியதல்ல என்பதைக் கூறிக்கொள்ள விரும்புகின்றேன்.

இந்த நாட்டின் இளைஞர், யுவதிகள் அனைவரையும் கருத்திற்கொண்டு நாம் ஒரு கொள்கையை உருவாக்குகின்றோம்.

அதனை எதிர்வரும் 28ஆம் திகதி சுகததாஸ உள்ளக விளையாட்டரங்கில் பிற்பகல் 2 மணிக்கு நடைபெறவுள்ள தேசிய இளைஞர் மாநாட்டில் வைத்து சஜித் பிரேமதாஸவிடம் கையளிக்கவுள்ளோம்.

அதுகுறித்து மாநாட்டில் கலந்துகொள்ளும் இளைஞர், யுவதிகள் அவருடன் கலந்துரையாட முடியும். அதனூடாக இறுதிப்படுத்தப்பட்ட இளைஞர் கொள்கையை நாட்டின் சட்டமாக்குவதற்குத் தீர்மானித்திருக்கின்றோம்’ எனக் குறிப்பிட்டுள்ளார்.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்