வாக்காளர் அட்டைகளை தபால் திணைக்களத்திடம் கையளிப்பு!

ஜனாதிபதி தேர்தலில் தபால் மூலம் வாக்களிப்பதற்கான வாக்காளர் அட்டைகளை தபால் திணைக்களத்திடம் கையளிக்கப்படவுள்ளது.

இன்று(வெள்ளிக்கிழமை) வாக்காளர் அட்டைகள் மாவட்ட மட்டத்தில் கையளிக்கப்படவுள்ளதாக தேர்தல் திணைக்களத்தின் பணிப்பாளர் நாயகம் சமன் ரத்நாயக்க தெரிவித்துள்ளார்.

ஜனாதிபதி தேர்தலில் தபால் மூலம் வாக்களிப்பதற்காக 6 இலட்சத்து 59 ஆயிரத்து 514 பேர் தகுதி பெற்றுள்ளனர்.

அரச நிறுவனங்கள் மற்றும் இராணுவத்தில் சேவையாற்றுவோர் எதிர்வரும் 31ஆம் திகதியும், நவம்பர் மாதம் முதலாம் திகதியும் தபால் மூலம் வாக்களிக்க முடியும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

மாவட்ட செயலகங்கள், தேர்தல் செயலகங்கள் மற்றும் பொலிஸ் திணைக்களம் ஆகியவற்றில் சேவையாற்றுவோர் எதிர்வரும் 4 ஆம் திகதி ஜனாதிபதித் தேர்தலுக்கு தபால் மூலம் வாக்களிக்க முடியும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்தத் தினங்களில் தபால் மூலம் வாக்களிக்க முடியாதவர்களுக்கு எதிர்வரும் நவம்பர் 7ஆம் திகதி தாம் சேவையாற்றும் பிரதேசங்களிலுள்ள மாவட்டத் தேர்தல் அலுவலகங்களில் தபால் மூலம் தமது வாக்குப்பதிவுகளை மேற்கொள்ள முடியும் என தேசிய தேர்தல்கள் ஆணைக்குழு அறிவித்துள்ளது.

ஜனாதிபதித் தேர்தலுக்கான உத்தியோகபூர்வ வாக்குச் சீட்டுக்களை விநியோகிக்கும் நடவடிக்கை எதிர்வரும் நவம்பர் மாதம் 3ஆம் திகதி முன்னெடுக்கப்படவுள்ளது.

எதிர்வரும் நவம்பர் மாதம் 9ஆம் திகதி வரை இந்த செயற்பாடுகள் முன்னெடுக்கப்படும் என தேசிய தேர்தல்கள் ஆணைக்குழு சுட்டிக்காட்டியுள்ளது.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்