கோட்டாவை நிராகரிப்பர் வடக்கு – கிழக்கு மக்கள் – கூட்டமைப்பு தமக்கே ஆதரவளிப்பர் என்கிறது ஐ.தே.க

வடக்கு, கிழக்கு மக்கள் எதிர்பார்த்த ஜனநாயகத்தையும், சுதந்திரத்தையும் நாமே உறுதி செய்தோம். எனவே, நாட்டின் ஏனைய பகுதிகளைப் போன்றே வடக்கு, கிழக்கு மாகாணங்களில் வாழும் தமிழ் மக்கள் புதிய ஜனநாயக முன்னணியின் ஜனாதிபதி வேட்பாளர் சஜித் பிரேமதாஸவுக்கு வாக்களிப்பார்கள். அதிலும் குறிப்பாக அவர்கள் எதிரணி வேட்பாளர் கோட்டாபய ராஜபக்சவுக்கு நிச்சயமாக வாக்களிக்கமாட்டார்கள் என்ற நம்பிக்கை எமக்கிருக்கின்றது. அத்தோடு தமிழ்த் தேசியக் கூட்டமைப்பும் எமக்கான அவர்களின் ஆதரவை விரைவில் வெளியிடுவார்கள் என்று எதிர்பார்க்கின்றேன்.”

– இவ்வாறு ஐக்கிய தேசியக் கட்சியின் பொதுச்செயலாளரும் அமைச்சருமான அகிலவிராஜ் காரியவசம் தெரிவித்தார்.

ஐக்கிய தேசியக் கட்சியின் தலைமையகமான சிறிகொத்தாவில் இன்று வியாழக்கிழமை ஊடகவியலாளர் சந்திப்பொன்று ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. அதில் எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலில் தமிழ்த் தேசிக் கூட்டமைப்பின் ஆதரவைப் பெற்றுக்கொள்வது தொடர்பில் நடத்தப்பட்டுவரும் பேச்சுகள் தற்போது எந்த மட்டத்திலுள்ளது என்று அவரிடம் கேட்கப்பட்ட போதே மேற்கண்டவாறு பதிலளித்தார்.

இது குறித்து அவர் மேலும் கூறியதாவது:-

“தமிழ்த் தேசியக் கூட்டமைப்புடன் தற்போது பேச்சுகள் நடைபெற்று வருகின்றன. யாழ்ப்பாணத்தில் இன்று (நேற்று) யாழ். சர்வதேச விமான நிலையம் திறந்துவைக்கப்படுகின்றது. அதற்காக பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவும் அங்கு சென்றிருக்கின்றார். அங்கும் அவர் கூட்டமைப்பின் உறுப்பினர்களுடன் கலந்துரையாடுவார்.

அதேபோன்று எமது அரசே தெற்கைப் போன்று வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களிலும் பல்வேறு அபிவிருத்திப் பணிகளை முன்னெடுத்தது. தற்போது சர்வதேச விமான நிலையம் ஒன்றும் வடக்கில் திறந்துவைக்கப்பட்டிருக்கின்றது. அவற்றை விடவும் வடக்கு, கிழக்கு மக்கள் எதிர்பார்த்த ஜனநாயகத்தையும், சுதந்திரத்தையும் நாமே உறுதிசெய்தோம்.

எனவே, நாட்டின் ஏனைய பகுதிகளைப் போன்றே வடக்கு, கிழக்கு மாகாணங்களில் வாழும் தமிழ் மக்கள் புதிய ஜனநாயக முன்னணியின் ஜனாதிபதி வேட்பாளர் சஜித் பிரேமதாஸவுக்கு வாக்களிப்பார்கள். அதிலும் குறிப்பாக அவர்கள் எதிரணி வேட்பாளர் கோட்டாபய ராஜபக்சவுக்கு நிச்சயமாக வாக்களிக்க மாட்டார்கள் என்ற நம்பிக்கை எமக்கிருக்கின்றது. அத்தோடு தமிழ்த் தேசியக் கூட்டமைப்பும் எமக்கு அவர்களின் ஆதரவை வெளிப்படுத்துவார்கள் என்ற நம்பிக்கையுண்டு. அதனை அவர்கள் விரைவில் வெளியிடுவார்கள் என்று எதிர்பார்க்கின்றேன்” – என்றார்.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்