வாகன சாரதிகள் சங்கங்களும் சஜித் பிரேமதாஸவுக்கு ஆதரவு!

ஜனாதிபதித் தேர்தலில் புதிய ஜனநாயக முன்னணியின் வேட்பாளர் சஜித் பிரேமதாஸவுக்கு தமது முழுமையான ஆதரவை வழங்குவதற்கும், அவரை வெற்றிபெறச் செய்வதற்கான அனைத்து நடவடிக்கைகளையும் முன்னெடுப்பதற்கும் இலங்கையின் பலதரப்பட்ட வாகன சாரதிகள் சங்கங்கள் முன்வந்திருக்கின்றன.

கொழும்பிலுள்ள ஐக்கிய தேசியக் கட்சியின் அலுவலகத்தில் இன்று வியாழக்கிழமை ஏற்பாடு செய்யப்பட்டிருந்த ஊடகவியலாளர் சந்திப்பிலேயே இவ்விடயம் தொடர்பில் தெளிவுபடுத்தப்பட்டது.

ஊடகவியலாளர் சந்திப்பில் இலங்கைப் போக்குவரத்துச் சபை, ஒன்றிணைந்த தனியார் பஸ் சேவை சங்கம், லொறி சாரதிகள் சங்கம், இலங்கை சுயதொழிலாளர் – முச்சக்கரவண்டி சாரதிகள் சங்கம் ஆகியவற்றின் பிரதிநிதிகள் கலந்துகொண்டதுடன், அவர்கள் புதிய ஜனநாயக முன்னணியின் ஜனாதிபதி வேட்பாளர் சஜித் பிரேமதாஸவுக்குத் தமது ஆதரவை வெளிப்படுத்தினர்.

அத்தோடு இலங்கைப் போக்குவரத்துச் சபையின் ஊழியர்களுக்கான ஓய்வூதியக் கொடுப்பனவு விவகாரம், ஓய்வுபெற்ற பின்னரும் போக்குவரத்துச் சபையினால் வழங்கப்பட்ட வாகன ஓட்டுநர் அனுமதிப் பத்திரத்தை வைத்திருப்பதற்கான அனுமதி உள்ளிட்ட விடயங்கள் தொடர்பில் சஜித் பிரேமதாஸவிடம் பேச்சு நடத்தியிருப்பதாகவும், அப்பிரச்சினைகளுக்குத் தீர்வைப்பெற்றுத் தருவதாக அவர் உறுதியளித்திருப்பதால் இம்முறை ஜனாதிபதித் தேர்தலில் சஜித் பிரேமதாஸவை வெற்றிபெறச் செய்வதற்கான அனைத்து நடவடிக்கைகளையும் முன்னெடுக்கவிருப்பதாகவும் போக்குவரத்துச் சபையின் பிரதிநிதிகள் தெரிவித்தனர்.

அத்தோடு சஜித் பிரேமதாஸ ஜனாதிபதியாகத் தெரிவான பின்னர் தமது பிரச்சினைகள் மற்றும் கோரிக்கைகள் தொடர்பில் ஆராய்ந்து அவற்றுக்குரிய நிரந்தர தீர்வைப் பெற்றுத்தர வேண்டும் என்றும் வலியுறுத்தினர்.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்